Breaking News

மனித உரிமை மீறல்களை ஏற்றுக்கொண்டது அரசாங்கம்!



ஸ்ரீலங்காவின் நீதிமன்றக் கட்டமைப்பு மற்றும் பொறுப்புக்கூறல் நடைமுறை நம்பகத்தன்மை அற்றதாக காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஒப்புக்கொண்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் தரப்பினர், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொதுச் செயலாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்களையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாக குளோபல் ஸ்ரீலங்கன் போரம் தெரிவித்துள்ளது.

குறித்த அமைப்பு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதங்களிலேயே இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. 

நாட்டு நலன்களுக்கு எதிராகவும், அரசியல் யாப்புக்கு எதிராகவும் மங்கள சமரவீர செயற்பட்டுள்ளதாக அந்த கடிதங்களில் கடுமையாக சாடப்பட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் பல கிளை அமைப்புகள், ஸ்ரீலங்கா மீது சுமத்திவரும் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பிலான விடயங்களின் உண்மைத்தன்மையை கண்டறிவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கங்கள் ஏற்படுத்தி சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பிலான அறிக்கையை அவர் பயன்படுத்த தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஸ்ரீலங்காவிற்கு எதிராக மனித உரிமைகள் பேரவை, முன்வைக்கும் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரமான கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணணைக்குழுவின் அறிக்கையை பயன்படுத்தி இருக்க முடியுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையி்ன் 32 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்ற வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, யுத்தக் குற்ற விசாரணை, மனித உரிமை மீறல் விடயங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பிலான விசாரணைகளுக்கு நீதிப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும், வடக்கே இராணுவம் பொதுமக்களின் காணிகளை 2018ஆம் ஆண்டில் முழுமையாகக் கையளித்துவிடும் எனவும், காணாமற்போனோர் குறித்த விடயத்தில் நிரந்தர அலுவலகம் ஒன்றை அமைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

நல்லிணக்கம் என்பது ஒரே இரவுக்குள் இடம்பெறுவதல்ல எனவும், கடும் உழைப்பும், அர்ப்பணிப்பும், நிதானமும், தன்னம்பிக்கையும் தேவைப்படுவதாகவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை குறித்த குற்றச்சாட்டுக்களை தமது அரசாங்கம் விசாரிக்கத் தயார் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த 28ஆம் திகதி ஜெனீவாவில் தெரிவித்திருந்தார்.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா மற்றும் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்களை சந்தித்த அவர், கிளஸ்ட் குண்டுகள் தொடர்பில் வெளியான குற்றச்சாட்டுக்கள் மிகவும் பாரதூரமானவை எனவும், எனினும் அவை குறித்தும் விசாரணை செய்யத் தயார் எனவும் அவர் உறுதியளித்திருந்தமை குறி்ப்பிடத்தக்கது.