தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இளஞ்செழியன் எச்சரிக்கை!
பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள், போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பில் குற்றஞ்சாட்டப்படும் தனியார் கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டு அதன் பொறுப்பாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போதைப்பொருள் தொடர்பில் யாழ்.மேல் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது, நீதிபதி இளஞ்செழியன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். குறித்த வழக்கு விசாரணையின்போது நீதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள் பலவற்றில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. சில தனியார் கல்வி நிலையங்கள் மாட்டுக் கொட்டகைகளைப் போன்று காணப்படுகின்றன. இத்தகைய கல்வி நிறுவனங்களை அவற்றின் பொறுப்பாளர்களும் நிர்வாகிகளும் உடனடியாக சீரமைக்க வேண்டும்.
காற்றோட்டமுள்ள சுத்தமான மலசலகூட வசதிகொண்ட, சுகாதாரத்திற்குப் பாதிப்பில்லாத வகையில் தனியார் கல்வி நிலையங்கள் நடைபெறுகின்றனவா என தனியார் கல்வி நிலையங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குகின்ற மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உறுதிசெய்துகொள்ள வேண்டும்.
போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள், தனியார் கல்வி நிலையங்களில் கூடுகின்ற மாணவர்களை இலக்கு வைத்து தமது போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுக்கும் சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, தனியார் கல்வி நிலையங்களில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றதாகவோ அல்லது போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப் பொருள் விற்பனை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலோ, அந்தக் கல்வி நிலையங்களின் பொறுப்பதிகாரிகளே அதற்கு பதில்கூற வேண்டும்.
பகல் வேளைகளில் மாத்திரமே வகுப்புக்களை நடத்த வேண்டும். அதிகாலை வேளைகளிலும், இரவு வேளைகளிலும் வகுப்புக்கள் நடத்துவதை தனியார் கல்வி நிலையங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். பெண் பிள்ளைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலும் போதைப்பொருள் விற்பனையும் அதிகரிக்கின்ற நேரங்களாக, இரவு நேரங்களே அமைந்திருக்கின்றன.
தனியார் கல்வி நிலையங்களுக்கு முன்னால் உள்ள வீதியோரங்களில் தனியார் கல்வி நிலையங்களுக்கு வரும் மாணவர்கள் கூடி நின்று கதைப்பதையும், அதனால், வீதியில் செல்பவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுவதையும் தனியார் கல்வி நிலையங்கள் கவனித்து, மாணவர்கள் அவ்வாறு கூடி நிற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாணவர்கள் வீதியோரங்களில் கூடிநிற்கும் சந்தர்ப்பங்களைத்தான், மாணவர்களுக்கு போதைப்பொருளை இலகுவில் விற்பனை செய்வதற்கான வாய்ப்பாக போதைப்பொருள் வியாபாரிகள் பயன்படுத்திக்கொள்கின்றார்கள். எனவே, போதைப்பொருள் வியாபாரிகள் மாணவர்களை அணுக முடியாத வகையில், வகுப்புக்கள் முடிந்த பின்னர், மாணவர்களை கல்வி நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
யாழ்ப்பாண சமூகத்திலிருந்து, போதைப்பொருளை ஒழிப்பதற்கு அனைத்துத் தரப்பும் தமக்குரிய கடமைகளில் இருந்து தவற முடியாது என்ற அடிப்படையிலேயே, இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன என்று நீதிபதி இளஞ்செழியன் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவுறுத்தல்களை மாநகர சபை மற்றும் நகரசபை ஆணையாளர்கள், பிரதேச சபை செயலாளர்களுக்கு அனுப்பி வைக்குமாறு, இதன்போது யாழ் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை விடுத்துள்ளார்.








