இராணுவத்தினரை பலிகொடுக்க மைத்திரி அரசு சதி :அம்பலப்படுத்தினார் மஹிந்த
போரின் போது இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அரச படையினரை பலி கொடுக்க சிலர் முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
அதேவேளை ரணில் – மைத்ரி அரசாங்கம் மேற்கொண்டுவரும் புதிய அரசியல் சாசனத்தில் வார்த்தை ஜாலங்களை அடிப்படையாகக் கொண்ட நாட்டை துண்டாடும் சதி முயற்சியொன்றும் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ள மஹிந்த, அதனால் பௌத்த மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பை அண்மித்த புறநகர் பகுதியான மொறட்டுவை ஸ்ரீ போதிராஜாராம விகாரையில் நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
”புதிய அரசியல் சாசனத்தில் பௌத்த மதம் ஓரங்கட்டப்படலாம் என்ற அச்சம் எம்மத்தியில் எழுந்துள்ளது. இந்த அச்சம் அனைத்து பௌத்த மக்கள் மத்தியிலும் நிலவுகின்றது. இந்த நிலைமையை புரிந்துகொண்டு அவ்வாறான நிலமை எற்படுவதைத் தடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்று நாம் நம்புகின்றோம்.
அரசாங்கம் மேற்கொள்ளும் அரசியல் சாசன திருத்தங்கள் தொடர்பில் அனைவரும் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் இந்த அரசாங்கம் வார்த்தை ஜாலங்களைக் கொண்டு நாட்டை துண்டாடும் சதியில் ஈடுபட்டுள்ளதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. அது மாத்திரமன்றி யுத்தத்தின் போது இடம்பெற்ற சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படையினரை பலிவாங்கும் முயற்சியில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அதற்காகவே போர் குற்றங்கள் உட்பட இறுதிக்கட்ட போரின் போது நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அழுத்தத்திற்கு அமைய சர்வதேச விசாரணைகளையும் நடத்த தற்போதைய அரசாங்கம் இணக்கம் வெளியிட்டிருக்கின்றது – என்றார்.
எவ்வாறாயினும் இறுதிக்கட்டப் போரின் போது நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை எடுத்த மாத்திரத்தில் நிராகரிப்பதால் சர்வதேச ரீதியில் கேடும் அழுத்தங்களை சந்திக்கும் என்று ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றைய தினம் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாலோ அல்லது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் மீது பதிலுக்கு குற்றச்சாட்டை முன்வைப்பதாலோ எந்தப் பயனும் இல்லை என்று தெரிவித்த மங்கள சமரவீர, அதனாலேயே தற்போதைய அரசாங்கம் நம்பகத்தன்மையான விசாரணைகளை நடாத்தி அவற்றுக்கு பதிலளிக்கத் தீர்மானித்ததாகவும் குறிப்பிட்டார்.
இவ்வாறு செய்யத் தவறினால் கடந்த மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு சர்வதேச அரங்கில் நேர்ந்த நெருக்கடியான நிலையே ஏற்படும் என்றும் கூறிய மங்கள சமரவீர, நாட்டினதும், நாட்டு மக்களினதும் எதிர்காலம் கருதியே தமது அரசாங்கம் விசாரணைப் பொறிமுறையொன்றை அமைக்கத் தீர்மானித்ததாகவும் இதற்கமைய 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் அதனை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








