“ஜனாதிபதி ஆசனத்தில் மஹிந்தவை அமர்த்தவேண்டும்”
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பயணத்தை யாராலும் தடுக்கமுடியாது. அப்பயணம், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவையும் கொண்டு முன்னகர்த்தப்படும் என்று தெரிவித்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, ஜனாதிபதி ஆசனத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அமரவைப்பதே எமது ஒரே இலக்காகும் என்றும் கூறினார்.
'ஒன்றிணைந்த எமது பயணத்தில் பசில் ராஜபக்ஷவையும் இணைத்து கொண்டே செயற்படுகின்றோம். எனவே, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்குள் குழப்பங்கள், பிரிவினைகள் நிகழ்வதாக இனி ஒருவராலும் வதந்திகளை பரப்ப முடியாது' என்றும் அவர் தெரிவித்தார்.
பதுளையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களில் மிகவும் பழமையானவன் நான். கடந்த 35 வருடங்களாக அக்கட்சியின் அமைப்பாளராக பதவி வகித்து வருகின்றேன். முன்னாள் பிரதமர் அமரர் சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் அகலவத்தைக்கு அமைப்பாளராக 1981 ஆம் ஆண்டு நான் நிமிக்கப்பட்டேன்.
அன்றிலிருந்து இன்றுவரை சு.கவில் அங்கம்வகித்து வருகின்றேன்' என்றார். 'கட்சியில் உள்ள சிரேஷ்ட உறுப்பினர் என்ற முறையில் கட்சியின் அடுத்த தலைவராக நானே செயற்படுவேன். ஆனால், நான் ஜனாதிபதியாக வருவேன் என்றோ அல்லது பிரதமராக போட்டியிடுவேன் என்றோ கூறப்போவதில்லை. ஏனெனில், அந்த இடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொண்டு வரவேண்டும் என்பதே எமது நோக்கமாகும்' என்றும் அவர் கூறினார்.
'சுதந்திரக் கட்சி என்ற ஒன்று தற்போது இல்லை. ஏனெனில் சு.கவிலுள்ள உறுப்பினர்களில் பலர், ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் உள்ள 51 உறுப்பினர்களும் வேறுபட்டு நிற்கவில்லை. ஒன்றிணைந்தே செயற்படுகின்றோம் என்றும் அவர் கூறினார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலிருந்து ஏழுபேரை எடுக்கப்போவதாக அரசாங்கம் சூளுரைத்தது. முடிந்தால் பிரித்துக்காட்டுமாறு சவால் விட்டோம்.
ஆனால், ஒருவரைக் கூட அரசாங்கத்தினால் பிரித்தெடுக்க முடியவில்லை. அதன் பின்னரே பசில் ராஜபக்ஷவினால் கட்சி இரண்டாக பிளவுபடும் எனக் கூறினார். இந்தப் பயணத்தில் ஒற்றுமையாக செயற்பட்டால் மட்டுமே வெற்றியை அடைய முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியதற்கமைவாக பசிலையும் இணைந்துக்கொண்டு பயணிப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம் என கூறினோம். 'எம்மை பொருத்தவரையில், ஜனாதிபதி இருக்கையில் மஹிந்த ராஜபக்ஷவை, அமர வைப்பதே எமது இலக்கு' என அவர் மேலும் கூறினார்.








