Breaking News

வடக்கு முதல்வரைத் தனியாகச் சந்திப்பார் பான் கீ மூன்



ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நாளை மறுநாள் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளும் போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட நிகழ்ச்சி நிரலின்படி, வடக்கு மாகாண முதலமைச்சரை, ஐ.நா பொதுச்செயலர் தனியாகச் சந்திப்பது குறித்த விபரங்கள் ஏதும் இடம்பெறவில்லை.

வடமாகாண முதலமைச்சரை ஐ.நா பொதுச்செயலர் தனியாகச் சந்திக்க மாட்டார் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பில் அவரும் பங்கேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் நாளை மறுநாள் ஐ.நா பொதுச்செயலரைச் சந்திக்க தம்முடன் வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும், இந்தச் சந்திப்பில் பங்கேற்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என்று நேற்றுமுன்தினம் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அதேவேளை, ஐ.நா பொதுச்செயலரை தனியாகச் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தருமாறு, வட மாகாண முதலமைச்சர் எழுத்து மூலம் கோரியிருந்தார்.

இந்த நிலையில், நாளை மறுநாள் பிற்பகல் 2 மணியளவில் முதலமைச்சரை யாழ்ப்பாணத்தில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கொழும்பிலுள்ள ஐ.நா பிரதிநிதி தகவல் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்புக்குப் பின்னர், இந்தச் சந்திப்பு இடம்பெறும் என்றும் இதில் வடக்கு மாகாண முதலமைச்சருடன் அமைச்சர்களும் பங்கேற்பர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

எனினும், வடக்கு மாகாண முதலமைச்சருக்கும், ஐ.நா பொதுச்செயலருக்கும் தனியான சந்திப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.