Breaking News

கூட்டமைப்புடன் இணைந்து ஐ.நா பொதுச்செயலரை சந்திப்பாரா முதலமைச்சர்?



சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து சந்திக்க விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ஏற்றுக் கொள்வதா- இல்லையா என்பது குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை என்ற வட மாகாண முதலமைச்சர் சி.வி்.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாளை கொழும்பு வரவுள்ள ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், வரும் செப்ரெம்பர் 2ஆம் நாள் யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ளார்.

இதன்போது, வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் அவர் தனித்தனியாகச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

எனினும் வடக்கு மாகாண முதலமைச்சருடன் தனியான சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில்,நேற்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட வட மாகாண முதலமைச்சர்,

“ஐ.நா பொதுச்செயலரைச் சந்திக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இணைந்து கொள்ளுமாறு, கூட்டமைப்பின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும் இந்தச் சந்திப்பில் பங்கேற்பதா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. சந்திப்பில் பங்கேற்பது குறித்துச் சிந்திப்போம்” என்று தெரிவித்தார்.