சர்வதேச கண்காணிப்புடன் விசேட மேல்நீதிமன்றம்! - பரணகம ஆணைக்குழு
சர்வதேச கண்காணிப்பாளர்களின் பங்கேற்புடன் சிங்கள, தமிழ்,முஸ்லிம் நீதிபதிகளைக் கொண்ட விசேட மேல் நீதிமன்றத்தை அமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாக காணாமல் போனோர் குறித்து விசாரித்த ஆணைக்குழுவின் தலைவர் மெக் ஷ்வல் பரணகம தெரிவித்தார்.
அத்துடன் இந்த விடயத்தில் வெளிநாட்டு தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மற்றும் தென் பகுதிகளிலிருந்து ஓய்வுபெற்ற நீதிபதிகளை பெற முடியும். சட்டமா அதிபரே வழக்குகளை நெறிப்படுத்தவேண்டும் என்றும் ஆணைக்குழு தனது அறிக்கையின் ஊடாக பரிந்துரை செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றும் நியமிக்கப்படவேண்டும். இதனூடாக குற்றம் செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு பொறுப்புக்கூறும் மன்னிப்பு வழங்க முடியும். மேலும் காணாமல் போனோரின் உறவினர்களுக்கு 5 இலட்சம் ரூபாவரை வாழ்வாதார கொடுப்பனவுகளை வழங்கவேண்டும் என்றும் காணாமல் போனோர் குறித்த விசாரித்த பரணமக ஆணைக்குழு அரசாங்கத்துக்கு பரிந்துரை முன்வைத்துள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.
மெக்ஷ்வல் பரணகம தலைமையிலான காணாமல் போனோர் குறித்து விசாரித்த ஆணைக்குழுவானது அண்மையில் தனது அறிக்கையை அரசாங்கத்துக்கு கையளித்தது. அந்த அறிக்கையிலேயே மேற்கண்ட விடயங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பில் காணாமல் போனோர் குறித்த விசாரித்த ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஷ்வல் பரணகம மேலும் குறிப்பிடுகையில்,
எமது ஆணைக்குழுவின் செயற்பாடுகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலையில் அரசாங்கத்திற்கு எமது அறிக்கையை சமர்ப்பித்திருக்கின்றோம். அந்த வகையில் எமது அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றோம். அதாவது மனித உரிமை மீறல்குற்றச்சாட்டுக்கள் மற்றும் காணாமல்போனோர் தொடர்பாக இரண்டு முறைமைகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டோருக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு நாங்கள் பரிந்துரை செய்திருக்கிறோம்.
அதாவது முதலாவதாக விசடே மேல் நீதிமன்றம் ஒன்று அமைத்து விசாரணைகளை முன்னெடுக்கலாம். இந்தநீதிமன்றத்திற்கு வடக்கு கிழக்கு தெற்கு பகுதிகளிலிருந்து சிங்கள, தமிழ், முஸ்லிம் நீதிபதிகளை நியமிக்க வேண்டும். வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் அதிகளவில் இருக்கின்றனர். எனவே அவர்களைக் கொண்டு விசேட மேல் நீதிமன்றத்தை நியமிக்க முடியும்.
இந்த விசேட நீதிமன்றத்திற்கு வெ ளிநாட்டு நீதிபதிகளை எக்காரணம் கொண்டும் நியமிக்கக் கூடாது. ஆனால் வெ ளிநாட்டு கண்காணிப்பாளர்களை இந்த நீதிமன்றத்தின் செயற்பாடுகளை பார்வையிடுவதற்கு அனுமதிக்கலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. எனவே வெ ளிநாட்டு கண்காணிப்பாளர்களுடன் மேல் நீதிமன்றத்தின் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
அதுமட்டுமன்றி இந்த நீதிமன்ற செயற்பாட்டிற்கு சர்வதேச தொழில்நுட்ப உதவிகளையும் பெற்றுக் கொள்ள முடியும். அதில் எந்த தவறும் இல்லை. எனவே வெ ளிநாட்டு கண்காணிப்பு மற்றும் வெ ளிநாட்டு தொழில் நுட்ப உதவிகளுடன் விசேட மேல் நீதின்றத்தை நியமிக்க முடியும். அதுமட்டுமன்றி நீதி வழங்கும் செயற்பாட்டில் இரண்டு வழிகளில் முன்னெடுக்க முடியும் என்பதால் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவொன்றை நியமிக்கலாம்.
அந்த உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவானது யுத்தகாலத்தில் என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிய முடியும். இதனூடாக குற்றங்களை செய்தவர்கள் தமது குற்றங்களை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு பொறுப்புக்கூறும் வகையிலான மன்னிப்பை வழங்க முடியும். இதற்கான ஒரு வரையறையை அமைத்துக் கொள்ளலாம்.
அத்துடன் காணாமல்போனோரின் உறவினர்கள் வாழ்வாதாரத்துக்கு உதவும் நோக்கில் 5 இலட்சம் ரூபாவரை உதவிகளை வழங்க வேண்டும். ஒவ்வொரு குடும்பங்களை பொறுத்தவரை இந்த தொகை வித்தியாசமாக அமையலாம். ஆனால் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்டும் 5 இலட்சம் ரூபாவுக்கும் உட்பட்டும் நியாயமான தொகையை இந்த மக்களுக்கு வழங்க வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு நாங்கள் எமது பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு முன்வைத்திருக்கின்றோம்.