பரபரப்பாகும் கொழும்பு : பாத யாத்திரை நகருக்குள் நுழைவதை தடுக்க கடும் முஸ்தீபு
தேசிய அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினர் முன்னெடுத்துள்ள பாத யாத்திரை இன்று (திங்கட்கிழமை) கொழும்பை வந்தடையவுள்ள நிலையில், தலைநகர் கொழும்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி கண்டியின் புறநகர் பகுதியான கெட்டம்பே எனும் இடத்தில் ஆரம்பமான குறித்த பேரணி, இன்று கொழும்பு நகருக்குள் நுழைவதை தடுப்பதற்கு அரசாங்கம் தரப்பால் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே கண்டி மற்றும் மாவனெல்ல ஆகிய நகரங்களுக்குள் நுழைவதற்கு நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்திருந்த நிலையில், அதேவகையான தடையை கொழும்பிலும் பிறப்பிக்குமாறு பேலியகொடை நீதிமன்றத்தை பொலிஸார் நாடியிருந்தபோதும், குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
மேலும் ஒன்றிணைந்த எதிரணியின் 17 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, இன்று நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. இவற்றையெல்லாம் கடந்து இன்று கொழும்பில் பாரிய கூட்டமொன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கும் ஒன்றிணைந்த எதிரணி, அதற்கான இடத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை.
கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் குறித்த கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், காலி முகத்திடலுக்கு இப் பேரணி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கான தடை முயற்சிகள் ஏற்படுத்தப்படுமாயின், வீதியிலேனும் கூட்டத்தை நடத்துவோம் என பொது எதிரணியினர் குறிப்பிட்டுள்ளனர்.