யாழ்ப்பாணத்திலுள்ள கிணறுகள் மனிதப் புதைகுழிகள்- விஜயகலா
யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் காணப்படும் கிணறுகள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவின் படி உடன் பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் காணாமல் போனவர்களின் சடலங்களும் உடற்பாகங்களும் அதில் காணப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். காணாமல் போனவர்களின் குடும்பத்தார் இது தொடர்பில் தன்னிடம் அறிவிப்புச் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். மாவட்டத்திலுள்ள பலர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதேவேளை, யாழ்ப்பாணப் பிரதேசத்திலுள்ள பல கிணறுகள் தற்பொழுது மண்ணினால் நிரப்பப்பட்டுள்ளன.
திருகேதீஷ்வரம் பிரதேசத்திலுள்ள கிணற்றில் இருந்து மனித எலும்புக் கூடுகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்டன. இவை காணாமல் போனவர்களின் உடற்பாகங்களாக இருக்கலாம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், இது தொடர்பில் உடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்