அரசுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழர் தாயக பூமியில் பௌத்த விகாரைகள்
அமைப்பதும், பலவந்தமான சிங்களக் குடியேற்றங்களும் தமிழ் மக்களின் கலாசார உரிமைகளைப் படுகொலை செய்வதற்கு சமனாகும் என்று ஸ்ரீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் அத்துல் கேஷாப்பிடம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வே மிகச்சிறந்தது என்று எடுத்துக்காட்டியுள்ள கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன், உரிய தீர்வை வழங்கும் விவகாரத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு அமெரிக்கா மேலும் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அமெரிக்க உயர்ஸ்தானிகர் தலைமையிலான தூதுக்குழுவினர் இன்று திங்கட்கிழமை வடக்கு மாகாணசபை உறுப்பினர்களைச் சந்தித்து புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிவதற்கான சந்திப்பை மேற்கொண்டிருந்தனர்.
சுமார் ஒருமணிநேரம் வரை இச்சந்திப்பு நடைபெற்றது. இதில் மாகாணசபை உறுப்பினர்கள் தத்தமது அவதானங்களைத் தெரிவித்தனர்.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
இந்த சந்திப்பு பற்றி அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்காவில் எழுபதாண்டுகால இனமோதல் என்பது வடக்கு-கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தின் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டதாகும். தமிழர் தாயகத்தின் பாதுகாப்பென்பது அவர்களது நிலம், அவர்களது மொழி, மதம், கலாசார தனித்துவத்தைப் பாதுகாப்பதே. இலங்கை இருதேசங்களைக் கொண்ட ஒரு நாடு என்பதை 1920களில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக பிரச்சாரம் செய்தார்.
சுதந்திர ஸ்ரீலங்காவிற்கு சுவிட்சர்லாந்து போன்ற அதிகாரப்பகிர்வுடன் கூடிய சமஷ்டி முறையே சரியானது என வாதிட்டார். கண்டிய சிங்களவர்கள் சுதந்திர இலங்கையில் கண்டிய சிங்களவர்களுக்குத் தனியாகவும், கரையோரச் சிங்களவர்களவர்கட்கு தனியாகவும் வடக்கு-கிழக்கு தமிழ் மக்களுக்குத் தனியானதுமான சமஷ்டி அலகுகளைக் கொண்ட சமஷ்டி ஆட்சிமுறையையே வலியுறுத்தினார்.
1944இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ரீலங்கா இரு தேசங்களைக் கொண்ட நாடு, தமிழ், சிங்கள தேசங்கள் பல நூற்றாண்டுகளாக பரிணாமம் பெற்ற தனித்தனி அடையாளங்களைக் கொண்டவை. எனவே. சுதந்திர இலங்கையில் இரண்டு சமஷ்டி அலகுகளைக் கொண்ட ஆட்சி முறையை வலியுறுத்தி தீர்மானங்களையும் நிறைவேற்றினர். ஆனால், தொடர்ந்துவந்த ஆட்சிகள் வடக்கு-கிழக்கை சிங்கள பௌத்த மயமாக்கும் செயற்பாடுகளையே தொடர்ந்தன.
எனவேதான் ஆயதப் போராட்டம் முனைப்பு பெற்றது. யுத்தம் முடிந்ததும் முன்னைய அரசு வேகவேகமாக வடக்கு-கிழக்கை சிங்கள பௌத்த மயமாக்கும் திட்டங்களை செயற்படுத்தத் தொடங்கியது. இன்றைய ஆட்சி அதனை மேலும் பரவலாகத் தொடர்கிறது.
இனிமேல் ஆயுதப் போராட்டத்திற்கு வாய்ப்பில்லை என்பது அரசிற்கு நன்கு தெரிந்திருந்தும் ‘தேசிய பாதுகாப்பை விட்டுக்கொடுக்க முடியாது’ என திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் இராணுவ தளங்களை விஸ்தரிப்பதும், பலப்படுத்துவதும் தொடர்கிறது.
வரவு-செலவு திட்டங்களில் பாதுகாப்பு ஒதுக்கீடு அதிகரித்தே செல்கிறது. தற்போது பன்னிரண்டு புதிய யுத்த விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு-கிழக்கில் இராணுவத்தின் தேவை இல்லாத இக்காலகட்டத்தில் இவற்றை தொடர்வது ஒருபுறம் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை வழங்க முடியாது எனவே கிளர்ச்சி செய்வார்கள். எனவே அதை அடக்க இராணுவம் பலமாக இருக்க வேண்டும் என்கின்ற உள்நோக்கத்தைத் தவிர இதற்கு வேறு காரணங்கள் இருக்கமுடியாது.
மறுபுறம் வடக்கு-கிழக்கை சிங்கள பௌத்தமயமாக்கும் வேலைத்திட்டங்களை தடையின்றி நடைமுறைப்படுத்தவும் பாதுகாக்கவும் அவர்களுக்கு இங்கு படையினர் தேவைப்படுகின்றனர். யுத்தம் முடிந்த பின்னரும் முப்படைகளும் சிங்களக் குடியேற்றங்களைச் செய்வது அவர்களுக்குப் பாதுகாப்பை வழங்குவது அவர்களுக்கான உட்கட்டுமான வசதிகள் செய்துகொடுப்பது, பௌத்தர்களே இல்லாத இடங்களிலெல்லாம் பௌத்த கோயில்களைக் கட்டுவது பௌத்த சிலைகளை நிறுவுவது, இவற்றிற்கு 24 மணிநேரமும் காவல் காப்பது, தமிழர் காணிகளைப் பறித்து சிங்கள விவசாயிகளிடம் கொடுப்பது, சிங்கள மீனவர்களை தமிழ் மாவட்டங்களுக்கு அழைத்து வந்து தொழில்செய்ய வைப்பது, அவர்களைப் பாதுகாப்பது என்பனவே முப்படைகளின் வேலைத்திட்டமாகும்.
ஒரு புறம் தீர்வு தொடர்பாக தெளிவின்றி பேசிவரும் அரசாங்கம், மறுபுறம் படைகளை வைத்து வடக்கு-கிழக்கை வேகமாக சிங்கள பௌத்த மயப்படுத்தி வருவதானது எத்தகைய தீர்வுத்திட்டத்தையும் அர்த்தமற்றதாக்கி, சிங்கள பௌத்தத்திற்குள் தமிழ் அடையாளங்களைக் கரைத்துவிடும் உள்நோக்கமுடையதாகும். எனவே நடைபெறும் சிங்களக் குடியேற்றம், இன அழிப்பின் ஓர் வடிவமாகவே நான் பார்க்கின்றேன்.
பௌத்த மயமாக்கல் ஒரு கலாசார படுகொலையாகவே நாம் நோக்குகின்றோம். எனவே, உங்கள் நாட்டு இராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் ஓர் நிரந்தரத் தீர்வை எட்டும்வரை, ஸ்ரீலங்கா அரசு வடக்கு-கிழக்கில் நடாத்திவருகின்ற சிங்களக் குடியேற்றங்களையும் பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்த வேண்டும். மேலும், இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் தனியார் நிலங்களை மிகவிரைவில் உரியவர்களிடம் கையளிப்பதுடன் இராணுவத்தை வெளியேற்றுவதற்கான முயற்சிகளில் உங்கள் காத்திரமான பங்களிப்பைச் செலுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.
இறுதியாக இன்று அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்படும் காணாமல் போனோருக்கான அலுவலகம், ஸ்ரீலங்காவில் இருக்கும் மனித உரிமை ஆணைக்குழுபோல் செயலற்ற ஒன்றாக இருக்கக்கூடிய அபாயம் உள்ளது. ஸ்ரீலங்கா மனிதவுரிமை ஆணைக்குழுவிற்கு எந்த அதிகாரமும் கிடையாது. எனவே ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையின் கிளை கொழும்பில் திறக்கப்படவேண்டுமென ஐ.நா மனிதவுரிமைப் பேரவை கூறியதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
இதுபோன்றே காணாமல் போனோருக்கான அலுவலகம் வெறும் பதிவுகளை மட்டுமே மேற்கொள்ளும். வேறெந்த விசாரணை அதிகாரமும் கிடையாது என ஜனாதிபதியே கூறும்போது இது வெறும் கண்துடைப்பு, உலகை ஏமாற்றும் செயல் என்ற கருத்தையே தமிழ் மக்கள் கொண்டுள்ளனர். எமக்கும் அவ்வாறே தோன்றுகின்றது. எனவே, இவ்வலுவலகம் பயனுள்ள வகையில் செயற்படக்கூடிய அதிகாரங்களைக் கொண்ட ஒன்றாக இருப்பதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும் – என்றார்.