Breaking News

அடுத்த ஆண்டு மே மாதம் இலங்கை வருகிறார் நரேந்திர மோடி



இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஆண்டு மே மாதம் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, கொழும்பில் நேற்று நடத்திய அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பின் பின்னர், தி ஹிந்து நாளிதழிடம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, ஹற்றனில் இந்திய உதவியுடன் கட்டப்பட்டு வரும் மருத்துவமனை திறப்பு விழாவிலும் மற்றொரு நிகழ்விலும் இந்தியப் பிரதமர் பங்கேற்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு வெசாக் கொண்டாட்டங்களை ஒட்டியதாகவே இந்தியப் பிரதமரின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அந்தப் பயணம், 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட முதல் பயணமாக அமைந்திருந்தது.

இதன்போது, ஒவ்வொரு ஆண்டும் இரண்டு நாடுகளின் தலைவர்களும், பரஸ்பரம், பயணங்களை மேற்கொள்வதென் இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது