Breaking News

பலாலி விமான நிலையம்: இந்தியாவுடன் உடன்பாடு செய்யவில்லை – பிரதமர்



பலாலி விமான நிலையத்தை நவீனமயப்படுத்தி விரிவாக்கம் செய்வது தொடர்பாக இந்தியாவுடனோ, இந்திய நிறுவனத்துடனோ, சிறிலங்கா அரசாங்கம் எந்த உடன்பாட்டையும் செய்து கொள்ளவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர்,

“பலாலி விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக இந்திய விமான நிலைய அதிகாரசபை, சாத்திய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

இந்த சாத்திய ஆய்வை மேற்கொள்வதற்கு அமைச்சரவையின் அனுமதி தேவையில்லை. சம்பந்தப்பட்ட அமைச்சே அதனை மேற்கொள்ளலாம்.

சம்பந்தப்பட்ட அமைச்சுக்களை உள்ளடக்கிய, அரசாங்கம் இதுபற்றி முழுமையாக அறிந்திருந்தது.” என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ள தேசிய கொள்கைகள் தொடர்பான பிரதிஅமைச்சர் நிரோசன் பெரேரா, பலாலி விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டம் எதையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இதற்கு காணிகள் தேவைப்படும். பெருமளவு நிதியும் தேவைப்படும். எனவே தற்போதைய நிலையில், பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கும் திட்டம் எதையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.