Breaking News

பிரபாகரனின் மக்கள் எழுச்சி இன்று எழுக தமிழ் பேரணியாக மாற்றம் பெற்றுள்ளது



கடந்த 2006 ஆம் ஆண்டு தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் எழுச்சி, 2016 ஆம் ஆண்டு வடமாகாண முதல்வர் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை முன்னெடுத்துள்ள பேரணி மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியாக மாற்றம் பெற்றுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், எழுக தமிழ் பேரணியின் ஏற்பாட்டுக் குழுவில் ஒருவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் பேரணி யாழ். முற்றவெளி மைதானத்தை சென்றடைந்த பின்னர் அங்கு இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் வெயிலுக்கு மத்தியிலும் பெருமளவில் இன்றைய பேரணியில் ஒன்று கூடியிருக்கிறோம் என்றால் நாங்கள் எங்களுடைய உரிமைகளை ஒரு போதும் விட்டுக் கொடுக்கத் தயாராகவில்லை. எங்களது உரிமைகள் அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் .

நாங்கள் இன்றைய பேரணியில் சொல்லும் செய்திகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் எதிரொலிக்க வேண்டும். இந்தச் செய்திகள் ஐ.நா பொதுச் சபைக்குக் கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புலம்பெயர் உறவுகளுக்கும் எமது செய்திகள் சென்றடைய வேண்டும். அது மாத்திரமல்ல இன்றைய பேரணி ஒரு ஆரம்பம் தான். பொங்கு தமிழும், எழுக தமிழும் எமது ஒண்றிணைவின் ஒரு ஆரம்பம் மாத்திரமே. வன்னியில், மட்டக்களப்பில், திருகோணமலையில், இன்னும் புலம்பெயர் தேசங்களில் இந்த எழுக தமிழ் வீறு கொண்டு எழும். அவ்வாறான சூழலில் தான் எமது உரிமைகளைப் பெறும் நிலை உருவாகும் எனவும் கூறியுள்ளார்.

எழுக தமிழ் பேரணியின் செய்தி இந்த நாட்டை ஆட்சி செய்துவரும் ஜனாதிபதி, ரணில் விக்கிரமசிங்க, இந நல்லிணக்கக் குழுவின் தலைவியாகவிருக்கின்ற சந்திரிக்கா, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆகியோரின் காதுகளுக்குக் கேட்க வேண்டிய செய்தி ஆகும்.

தமிழ் மக்கள் தோற்றுப் போனவர்களல்ல.ஆகவே, தமிழ் மக்களுடைய உரிமைகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் நிலங்களைக் கபளீகரம் செய்ய முடியாது. தமிழ் மக்களின் கலாசாரத்தை அழிக்க முடியாது.

தமிழ் மக்க்களின் நாகரீகம், பண்பாடு போன்றவற்றை அழிக்க முடியாது. இவ்வாறான பாதிப்புக்களுக்கு எதிராக நாம் இறுதி வரை போராடுவோம். இதுவே, தமிழ்மக்கள் பேரவையினது முடிவாகும்.

ஆகவே, அமையப் போகிற அரசியல் சாசனம் என்பது தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய, வடகிழக்கு இணைந்த, தமிழ் மக்களுடைய இறையாண்மை, தமிழ்மக்களுடைய சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டதொரு அரசியல் சாசனமாக, சமஸ்டி அரசியல் அமைப்பு முறையிலான அரசியல் சாசனமாக அமையப் பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை சம்பந்தன் முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு அவர் முன்னெடுக்கப்படாத பட்சத்தில் தங்களையும் இந்த அரசாங்கம் ஏமாற்றி விட்டதென அவர் சொல்ல வேண்டும். தற்போதைய அரசாங்கம் ஐ. நா சபையையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

இந்த அரசாங்கம் முன்னர் அமிர்தலிங்கத்தை, தந்தை செல்வா போன்ற தமிழ் அரசியல் தலைவர்களை முன்னரும் ஏமாற்றியது. ஆகவே, நாங்கள் இனியும் ஏமாற்றுவதற்குத் தயாராகவில்லை எனவும் எழுக தமிழ் பேரணியின் ஏற்பாட்டுக் குழுவில் ஒருவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.