ஜெயலலிதா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கடும் அமளி
காவலர்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுப்பது பற்றி பேச தி.மு.க.வுக்கு எந்த அருகதையும் இல்லை என்று ஜெயலலிதா பேசியதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
மு.க.ஸ்டாலின்:- காவல்துறை வீட்டு வசதிக்காக ரூ.422 கோடியில் 2,623 வீடுகள் கட்டப்படும் என்று கொள்கை விளக்கக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது. அதுபோல காவல்துறை அதிகாரிகளுக்கு ‘உங்கள் சொந்த இல்லம்’ திட்டத்தின்கீழ் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மற்றும் தீயணைப்பு கோட்ட அலுவலர்களுக்காக மாவட்ட தலைநகரங்களில் தலா 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து வீடுகள் கட்டித்தரப்படும் என்று ஏற்கனவே முதல்-அமைச்சர் கூறி இருந்தார். இதில் சென்னை மேலகோட்டையூர் தவிர மற்ற 31 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா?
முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- எதிர்க்கட்சித்தலைவருக்கு காவலர்களுக்கு வீட்டுவசதி செய்து கொடுப்பது பற்றி திடீரென்று அக்கறையும் கவலையும் வந்திருக்கிறது. காவலர்களுக்கு, காவல் துறையினருக்கு வீட்டு வசதி செய்து கொடுப்பது குறித்து யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். ஆனால் தி.மு.க. வினர் கேள்வி கேட்கக்கூடாது. அதைக் கேட்பதற்கான அருகதை தி.மு.க.வினருக்கு இல்லை. ஏன் என்று சொல்கிறேன் கேளுங்கள். காரணம் இல்லாமல் எதையும் சொல்ல மாட்டேன்.
(அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர்.)
முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- நான் இன்னும் சொல்லி முடிக்கவில்லையே. காவல் துறையினருக்கு வீட்டுகள் கட்டிக்கொடுப்பதற்காக என்று எம்.ஜி.ஆர். 1980-ம் ஆண்டு காவல்துறை வீட்டுவசதிக் கழகம் என்ற அமைப்பினை ஏற்படுத்தினார். அவர் தான் அந்தத்திட்டத்தை தொடங்கிவைத்தார்.
1989-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றபொழுது, முதல் வேலையாக அந்தக் காவல்துறை வீட்டு வசதிக் கழகத்தை கலைத்து இழுத்து மூடினார். 1991-ம் ஆண்டில் நான் முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் காவல்துறை வீட்டுவசதி கழகத்தை மீண்டும் துவக்கினேன். அதன் பின்னர் ஆயிரக் கணக்கில் காவல் துறையினருக்கு வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கிறோம். அந்த விவரங்கள் எல்லாம் ஏற்கனவே வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் தரப்பட்டிருக்கிறது. அதற்கு நான் மீண்டும் நேரத்தை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.
ஆனால், காவல் துறையினருக்காகவே பிரத்தியேகமாகத் தொடங்கப்பட்ட காவல்துறை வீட்டுவசதிக்கழகத்தை கலைத்து, இழுத்து மூடிய தி.மு.க.வினர் இதைப்பற்றி கேள்வி கேட்க அருகதை இல்லை என்று அதனால் தான் சொல்கிறேன்.
(முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பேச்சுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். பதிலுக்கு அ.தி.மு.க. உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சட்டசபையில் கூச்சலும், கடும் அமளியும் ஏற்பட்டது.)
சபாநாயகர்:- எதிர்க்கட்சி தலைவர் கேள்வி கேட்டதற்கு முதல்-அமைச்சர் விளக்கம் தெரிவிக்கிறார். உங்கள் ஆட்சியில் செய்த தவறை சுட்டிக்காட்டினார்.
மு.க.ஸ்டாலின்:- நாங்கள் கேள்வி கேட்பதற்கு அமைச்சர்கள் பதில் சொல்கிறார்கள். அவர்கள் கூறும் விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறோம். (இவ்வாறு கூறிய மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சரைப் பார்த்து சில கேள்விகளை கேட்டார். உடனே அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு தி.மு.க. உறுப்பினர்களும் வாக்குவாதம் செய்தனர். இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது.)
மு.க.ஸ்டாலின் கூறிய சில வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கினார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மு.க.ஸ்டாலினும், சபாநாயகருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
சபாநாயகர்:- நீங்கள் வேறு கேள்வி இருந்தால் பேசுங்கள். முதல்-அமைச்சர் பதில் தருவார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- எதிர்க்கட்சித் தலைவர் கேட்ட கேள்விகளுக்கு நான் விளக்கம் அளிக்கிறேன்.
(உடனே தி.மு.க. உறுப்பினர்கள் ஜெயலலிதாவை பேசவிட முடியாத அளவுக்கு ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று, கோஷமிட்டனர். 12.15 மணிக்கு தொடங்கிய அமளி 12.47 மணி வரை தொடர்ந்தது. இதனால் அவை 30 நிமிடங்களுக்கு மேலாக முடங்கியது.)
முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதில் அளிக்க நீண்ட நேரம் நின்று கொண்டே இருந்தார். ஆனாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமராமல் கோஷமிட்டபடி இருந்தனர்.
சபாநாயகர்:- இந்த அவையை நான் அமைதியாக நடத்த விரும்புகிறேன். தேவை இல்லாமல் தி.மு.க. உறுப்பினர்கள் குந்தகம் விளைவிக்கிறீர்கள்.
தி.மு.க.வினர் எதிர்க்கட்சித் தலைவர் சொன்ன வார்த்தையை மட்டும் எப்படி நீக்கலாம்? என்று கேட்டு சபாநாயகருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
நான் கொடுத்த தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை. முதல்- அமைச்சர் அவைக்கு ஒவ்வாத சொல்லை கூறவில்லை என்று கூறிய சபா நாயகர், சிறுவாணி விவகாரம் தொடர்பான தனி தீர்மானத்தை கொண்டுவர முதல்- அமைச்சருக்கு அனுமதி வழங்கினார். அதன்பிறகே தி.மு.க. உறுப்பினர்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.