கிளிநொச்சியில் படையினரின் வசமிருந்த 142 ஏக்கர் காணி விடுவிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் படையினரின் வசமிருந்த 142 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை, கரைச்சி, பூநகரி பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் பொதுமக்களுக்குச்சொந்தமான மற்றும் அரச காணிகள் படையினர் வசம் காணப்படுகின்றது.
இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் வசமிருந்த காணிகள் கட்டம் கட்டதாக விடுவிக்கப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை குறித்த காணிகள் தொடர்பான விபரங்கள் தனக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி கரைச்சிப்பிரதேச செயலாளர் பிரிவில் 109 ஏக்கரும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 25 ஏக்கரும், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 6 ஏக்கரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளில் பயிர் செய்கை காணிகள், குடியிருப்புக்காணிகள் உள்ளடங்குவதாக தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், குறித்த காணிகளிலிருந்து படையினர் வெளியேறி காணிகளை அந்தப்பிரதேச செயலாளர்களிடம் கையளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நேற்றைய தினம் கரைச்சிப்பிரதேச செயலாளர் பிரிவில் முன்னர் சிறுவர் இல்லம் இயங்கி வந்த காணிகள் மற்றும் ஏனைய காணிகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.