Breaking News

மலேசிய உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதல் : பின்னணியில் கருணா-கே.பி?



மலேசியாவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் கருணா, கே.பி ஆகியோர் செயற்பட்டுள்ளனரா? என்பது பற்றிய சந்தேகம் எழுந்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர், தமிழ் புலம்பெயர் அமைப்பு எனக் கூறிக்கொண்ட சில தரப்பினரின் செயற்பாடுகளின் பின்னணியில் கருணா, கேபி ஆகியோர் செயற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டார்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு குழுவுடன் மலேசியாவிற்கு விஜயம் செய்திருந்ததுடன், இந்தக் குழுவை நல்ல குழுவாக அடையாளப்படுத்தி விட முடியாது என்று சுட்டிக்காட்டிய அவர், இல்லாத பிரச்சினைகளை உருவாக்கக்கூடிய தரப்பினர் இந்த குழுவில் அங்கம் வகித்திருந்ததாகவும் கூறினார்.

எனவே, மஹிந்தவும் அவரது அணியினரும் மலேசியா சென்று அங்கும் பிரச்சினை ஏற்படுத்த முயற்சித்தனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இது குறித்து மலேசிய அரசாங்கம் எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

கே.பி மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், கருணாவிற்கும் மலேசிய தொடர்புகள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.