யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிகழ்வுகளை நடத்த தயார்; எஸ்.பி.வி
யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கான நிகழ்களை நடாத்துவதற்கு தயாராக உள்ளதாக தென்னிந்திய பிண்ணிப் பாடகர் எஸ்.பி.வி. பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாட்டிற்கு அனைத்து தரப்பினர்களும் ஒன்றிணைந்து முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தென்னிந்திய பிண்ணிப் பாடகர்களான எஸ்.பி.வி பாலசுப்பிரமணியம் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.
இவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள ஜெட்வின் கோட்டலில் நேற்று நண்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது, ஸ்ரீலங்காவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, பெற்றோர்களை இழந்த சிறார்களுக்காக இசை நிகழ்ச்சியை இலவசமாக நடத்துவதற்கான முயற்சிகளை எடுப்பீர்களா? என ஊடகவியலாளர்களால் எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே எஸ்.பி.வி பாலசுப்பிரமணியம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் இருந்து செல்கின்றேன். இங்கு உள்ளவர்களாக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும், இப்படிப்பட்ட நிகழ்வுகளை இலவசமாக நடாத்திக் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
ஆனால் அந்த நிகழ்ச்சியானது, எதற்காக பயன்பட வேண்டுமோ அதற்காக முழுமையாக பயன்பட வேண்டும். இவ்வாறான முயற்சிக்கு நாங்கள் நிச்சயமாக பங்களிப்பு வழங்குவோம்.
ஆனால் இவ்வாறான நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதற்கு பல குழுக்கள், நிறுவனங்களும் உள்ளது. ஒவ்வொருவரைக் குறை சொல்லிக் கொண்டு இருக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து இவ்வாறான நிகழ்வுகளை ஒழுங்கு செய்ய வேண்டும்.
குறிப்பாக சமூக வலைத்தளங்களில் குறைகூறுவதை நிறுத்த வேண்டும். இவ்வாற நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் போது, அனைத்து கழகங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கான நிகழ்களை இங்கு நடாத்துவதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். இவ்வாறான நிகழ்வுகளை எதிர்ப்பவர்களும், ஆதரிப்பவர்களும் ஒன்றிணைந்து வாருங்கள், ஒன்று சேர்ந்து நடாத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.