புனர்வாழ்வு அளிக்கப்படாத புலிகளுக்கும் ஆவா அமைப்புக்கும் தொடர்பு
புனர்வாழ்வு அளிக்கப்படாத தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிரவாத அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் வடக்கில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்படாத 270 விடுதலைப் புலிகள் தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் ஆவா என்ற மோட்டார் சைக்கிள் கும்பலுடன் தொடர்புபட்டிருப்பதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆவா குழு குறித்து ஈ.பி.டி.பி.யின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்திற்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த முன்னாள் விடுதலைப் புலிகள் தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் வன்னியிலிருந்து அரசாங்கத்திடம் சரணடையாது யாழ்ப்பாணத்திற்கு தப்பிச் சென்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் இந்த ஆவா குழுவிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆவா குழுவினருடன் சில தமிழ் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக புலனாய்வுப் பிரிவுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறித்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஆ)








