வடமாகாண சபையின் புதிய பிரதி அவை தலைவராக வ.கமலேஷ்வரன் தெரிவு
இதற்கான வாக்கெடுப்பு இன்று வடமாகாண சபையில் இடம்பெற்றதோடு, 18 பெரும்பான்மை வாக்குகளால் இவர் தெரிவு செய்யப்பட்டார்.
இதனையடுத்து, பிரதி அவைத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட வல்லிபுரம் கமலேஸ்வரன் வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் பெற்று தனக்கான ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையின் 64 ஆவது அமர்வு இன்று இடம்பெற்ற போது, பிரதி அவைத் தலைவரை தெரிவு செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, பிரதி அவைத் தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் இன்றைய வட மாகாண சபையின் அமர்வில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வடமாகாண பிரதி அவைத் தலைவராக கடமையாற்றிய மரியாம்பிள்ளை அன்ரனி ஜெகநாதன் கடந்த 07 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து வட மாகாண சபைக்கான பிரதி அவைத் தலைவரை தெரிவு செய்து குறித்து இன்று கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, வட மாகாண சபையின் பிரதி அவைத் தலைவராக வட மாகாண சபை உறுப்பினரானவல்லிபுரம் கமலேஸ்வரனை நியமிக்குமாறு வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் அவையில் தெரிவித்தார்.
எனினும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனை பிரதி அவைத் தலைவராகத் தெரிவுசெய்யுமாறு வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது சபையில் குழப்பநிலை எழுந்ததைத் தொடரந்து வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம், தேநீர் இடைவேளையின் பின்னர் பிரதி அவைத் தலைவரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர் இடம்பெற்ற வாக்கெடுப்பில் வடமாகாண சபை உறுப்பினரான வல்லிபுரம் கமலேஸ்வரன் 18 வாக்குகளையும் அனந்தி சசிதரன் 13 வாக்குகளையும் நடுநிலையாக 1 வாக்குகள் பதிவாகியதை அடுத்து வல்லிபுரம் கமலேஸ்வரன் வடமாகாண பிரதி அவைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.








