Breaking News

'போர்க்களத்தில் ஒரு பூ' படம் வெளியிட தடை! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு



போர்க்களத்தில் ஒரு பூ படத்தை வெளியிட, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இலங்கையில், இறுதிக்கட்டப் போரின் போது, இசைப்பிரியா என்பவரை, இராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த செய்தி வெளியானது.

இவர், இலங்கை, புலிகளின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர்.

இசைப்பிரியா படுகொலை சம்பவத்தை மையமாக வைத்து, போர்க்களத்தில் ஒரு பூ என்ற படத்தை, கணேசன் என்பவர் இயக்கினார்.

இப்படத்துக்கு சான்றிதழ் வழங்க, 'சென்சார் போர்டு' மறுத்து விட்டது. இதை எதிர்த்து, திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் முறையிடப்பட்டது, தீர்ப்பாயமும் அதை நிராகரித்தது.

அதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில், படத் தயாரிப்பாளர், இயக்குனர், மனு தாக்கல் செய்தனர்.

'திரைப்படத்தை வெளியிட்டால், எங்கள் குடும்பத்துக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, படத்தை வெளியிடக் கூடாது' என, இசைப்பிரியாவின் தாயார் வேதரஞ்சனி மற்றும் சகோதரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில், உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்திய, இலங்கை இராணுவத்தினரை, படத்தில் விமர்சித்துள்ளனர், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை நியாயப்படுத்தி உள்ளனர்.

மேலும், இசைப்பிரியாவை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த சம்பவத்தை சித்தரித்துள்ளனர், வன்முறை காட்சிகள் அதிகம் உள்ளன. இலங்கை இராணுவத்தை பற்றி, அவதுாறாக காட்டியுள்ளனர்.

அதனால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படும். எனவே, படத்துக்கு சான்றிதழ் வழங்க மறுத்து, சென்சார் போர்டு எடுத்த முடிவு சரியானது, அதை உறுதி செய்த தீர்ப்பாயத்தின் உத்தரவிலும் குறுக்கிட முடியாது; மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.

இசைப்பிரியாவின் தாயார் மற்றும் சகோதரி கோரியபடி, இப்படத்தை திரையிட தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.