எழுக தமிழ்ப்பேரணிக்கு மகிந்தவே காரணம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்த தவறு காரணமாகவே, வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் போன்றோர் மோசமான இனவாதத்தை கதைத்து வருவதுடன், நாட்டை பிளவுபடுத்துமாறு கோரிக்கை விடுத்து வருவதாக பௌத்த பிக்குகளின் குரல் என்ற சிங்கள பௌத்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த மஹிந்த ராஜபக்ச, உடனடியாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என பௌத்த பிக்குகளின் குரல் என்ற அமைப்பின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை 13 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யாதது மாத்திரமன்றி வட மாகாண சபைத் தேர்தலை நடத்தி சீ.வி.விக்னேஸ்வரனை வட மாகாணத்திற்கு முதலமைச்சராக தெரிவு செய்யவும் மஹிந்த இடமளித்துவிட்டதாகவும் நாலக்க தேரர் சாடியுள்ளார்.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தத் தவறுகளை செய்தது போதாது என்று தற்போதைய ஆட்சியாளர்களும் விக்னேஸ்வரன் போன்றோருக்கு தமிழ் மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டிவிட முழுச் சுதந்திரத்தையும் வழங்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஏற்கனவே கடந்த செப்டெம்பர் 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி என்ற பெயரில் இனாவதத்தை பரப்பும் பேரணியொன்றை நடத்திய வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான கோஷ்டி, நாளைய தினம் வவுனியாவிலும் அவ்வாறான பாரிய பேரணியொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் பெங்கமுவே நாலக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் யாழ்ப்பாணத்தில் நடத்தியது போல் மீண்டுமொரு இனவாதத்தை தூண்டும் வகையில் பேரணியொன்று நடத்தப்பட்டால் அதனை தாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்றும் பௌத்த பிக்குகளின் குரல் என்ற அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளதுடன், இவ்வாறான போராட்டங்களுக்கு எதிராக பௌத்த பிக்குகள் தலைமையில் சிங்கள மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.