ஆவா குழு சந்தேக நபர்கள் 68 பேரில் 38 பேர் கைது
யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்திவரும் ஆவா குழு என சந்தேகிக்கப்படும் 62 பேர் இதுவைரை இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 38 பேர் தற்போது வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஆவா குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் என கைது செய்யப்பட்டுள்ள 38 பேரில் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் நாள் வாசிப்பு இன்றைய தினம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இதன்போது நிலையியற் கட்டளைச் சட்டத்தின் 23/2இன் கீழ் எதிர்கட்சி பிரதம கொறடாவான ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஆவா குழு தொடர்பாக சபையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சாகல ரத்நாயக்க, இந்தக் குழுவினர் முதலில் வாள்களை பிரேசிலில் இருந்தே கொண்டு வந்ததாகவும், முன்னதாக இந்தியாவுக்கு அவற்றை எடுத்து வந்து பின்னர் ஸ்ரீலங்காவிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
2011ஆம் ஆண்டு யாழ்பாணம், இணுவில் அம்மன் கோவிலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின்போது எதிர்தரப்பினர் மீது தாக்குதல் நடத்துவதற்காக கூடிய குழுவே ஆவா குழுவாக உருவெடுத்துள்ளது. இக்குழுவில் உள்ளவர்கள் யாழ் குடாநாட்டின் பல்வேறு அடிதடிகளில் ஈடுபட்டதுடன், அவர்களை ‘ஆவா’ குழு என்றும் அடையாளப்படுத்தவும் ஆரம்பித்துள்ளனர்.
இதன் தலைவராக தலைவராக கண்ணியம்மாள் கோவில் அருகில் இணுவில் மேற்கு, இணுவில் பகுதியில் வசிக்கும் குமரேஸ் ரத்தினம் வினோதன் செயற்பட்டு வருகிறார். இவர் உள்ளிட்ட பலர் தற்பொழுது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆவா குழுவில் 18 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களே பெரும்பாலும் காணப்படுகின்றனர்.
இந்தக் குழுவினர் அணியினால் யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம், சாவகச்சேரி மற்றும் மானிப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுகள் உள்ளிட்ட பல இடங்களில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களிலும் பல்கலைக்கழக மாணவர்களை பயமுறுத்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்துதல் மற்றும் வர்த்தகர்களை அச்சுறுத்தி கப்பம் பெறுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த காலங்களில் இந்த குழுவினர் ஒப்பந்த அடிப்படையிலும் குற்றச் செயல்களில் ஈடுப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளன. வர்த்தகர்களிடம் கப்பம் கோரல் போன்ற செயற்பாடுகளில் இவர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த குழுவைச் சேர்ந்த அங்கத்தவர்கள் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நீதிமன்றத்தின் முன்னிலையிலும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறானவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுமாத்திரமன்றி குற்றவாளியாக காணப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு அந்த தண்டப்பணம் செலுத்தப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்ட சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.
இந்தக் குழுவில் சுமார் 62 பேர் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் 38 பேர் கைது செய்யப்பட்டு 6 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. 32 பேருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பிரதான தலைவர்கள் எனக் கருதப்படும் 8 பேரைத் தேடிவருகின்றோம். அதில் புதிய தலைவரும் இருக்கிறார் என்று கருதப்படுகிறது. ஏனெனில், ஆரம்பத் தலைவர் தற்போது விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றார். அவர்களிடம் நிறைய பணம் உள்ளது. வெளிநாடுகளிலுள்ள உறவினர்கள் மூலமே இவர்களுக்கு பணம் வருகிறது என்றே நாம் கருதுகிறோம். இந்த சகல இளைஞர்களிடமும் நவீன ரக மோட்டார் சைக்கிள்கள் இருக்கின்றன.
இதேநேரம், தென்னிந்தியாவில் இருந்து வந்த உறுப்பினர் ஒருவர் மூலமே இந்த குழுவினருக்கான முதலாவது வாள் வந்துள்ளது. பிரேசிலில் இருந்தே அந்த வாள் கொண்டு வரப்பட்டுள்ளது. அது போன்ற பல வாள்கள் இங்குள்ள ஆயுத பட்டறைகளிலும் உருவாக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறான வாளை தயாரிக்க முடியாதென மறுத்த ஆயுத பட்டறை உரிமையாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் பதிவாகியுள்ளது.
ஆகவே, இவ்வாறு இந்த விசாரணைகளை நாம் நடத்திச் செல்கிறோம். இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்ட இராணுவ உறுப்பினர் பற்றி, அவர் இராணுவத்தின் சுயேட்சை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் சேவை ரெஜிமென்ட்டில் பணியாற்றிய ஒருவர். பல மாதங்களாக அவர் கடமைக்கு சமூகமளித்திருக்கவில்லை. ஆகவே, தப்பிச்சென்றவராகவே கருதப்படுகிறார் என்றார். அவர் இராணுவத்தின் சுயேட்சை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் சேவை ரெஜிமென்ட்டில் பணியாற்றிய ஒருவர். பல மாதங்களாக அவர் கடமைக்கு சமூகமளித்திருக்கவில்லை - என்றார்.
இதேவேளை ஆவா குழுவுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளோ அல்லது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவோ தொடர்புபட்டிருக்கவில்லை என்று தென்னிலங்கையில் அரசியல்வாதிகள் பலர் கூறிவருகின்ற போதிலும், அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஆவா குழுவுடன் உருவாக்கத்திற்குப் பின்னால் கோட்டாபய ராஜபக்ச செயற்படுவதாக பகிரங்கமாகவே குற்றம் சுமத்தியிருந்தார்.
எனினும் இதுதொடர்பான ஆதாரங்களைத் தரும்பட்சத்தில் பரிசீலித்துப் பார்க்க முடியும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி கடந்த வாரம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.








