பெளத்த மதத்தை சில பெளத்த துறவிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் – மனோ
உண்மையில் பெளத்தத்திற்கு ஒருசில பெளத்த துறவிகளிடமிருந்து தான் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பது கண்கூடாக தெரிகிறது.
ஆகவே, இத்தகைய துறவிகளிடமிருந்து பெளத்த மதத்தை காப்பாற்றுங்கள் என்று சிங்கள பெளத்த மத, அரசியல் தலைவர்களை நான் கோரியுள்ள்ளேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி இனவாதத்தை கக்கும், மதத்தை பயன்படுத்தி தமிழ், முஸ்லிம் மக்களை பயமுறுத்தும் ஒருசில பெளத்த துறவிகளுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்னிடம் பெருந்தொகையான தமிழ், முஸ்லிம் மக்கள் கோரியுள்ளனர். அதை நான் கவனத்தில் எடுத்துள்ளேன்.
மட்டக்களப்பில் ஒரு விஹாராதிபதி எழுப்பிய காட்டுக்கூச்சலை கண்டும், இரத்மலானையில் ஒரு விஹாராதிபதி, அங்கு வாழும் ஒரு தமிழ் குடும்பத்துக்கு எதிராக இனவாதம் பேசி வன்முறையை தூண்டிவிட்டதையும், அறிந்தும் நான் அதிர்ந்து போயுள்ளேன்.
முஸ்லிம் மக்களுக்கு எதிராக, கொழும்பில் ஒருநபர் சிறு கூட்டத்தை வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக பகிரங்கமாக இனவாதம் கக்கிவருவதை கண்டும் நான் கவலையடைந்துள்ளேன். இந்த நபருக்கு எதிராக சட்ட நடவடிகையை துரிதப்படுத்தும்படி, பொலிஸ் மாஅதிபரிடம் நான் கூறியுள்ளேன்.
இவை தொடர்பில் இன்று அமைச்சரவையிலும் குரல் எழுப்பவுள்ளேன். இந்த மோசமான நிலைமைகள் தொடர்பில் பதில்களை தர ஜனாதிபதியும், பிரதமரும் கடமைப்பட்டுள்ளார்கள் எனவும் மேலும் தெரிவித்தார்.








