ட்ரம்பின் வெற்றி யாருக்கு சாதகம்? -என்.கண்ணன்
அமெரிக்காவில் கடந்தவாரம் நடந்த ஜனாதிபதித்
தேர்தலின் முடிவு உலகம் முழுவதற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹிலாரி கிளின்டனே வெற்றி பெறுவார் என்று ஆரம்பத்தில் இருந்து எதிர்பார்க்கப்பட்டு வந்த நம்பிக்கையையும், கடைசி வரையில் அதையே கூறிக் கொண்டிருந்த பெரும்பாலான ஊடகங்களினது கருத்துக்கணிப்புகளையும் அடித்து நொருக்கிக் கொண்டு வெற்றியைப் பெற்றிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்.
தேர்தல் பிரசாரங்களின் போது, பலசமயங்களில் கோமாளித்தனமான பிரசாரங்களை மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் அவர். ஆனாலும், அவரது தீவிரமான கருத்துகள்- பெரும்பான்மையான வெள்ளையின அமெரிக்கர்களிடம் எடுபட்டிருக்கிறது.
தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் ஜனநாயகத் கட்சியிடம் நாட்டின் ஆட்சியை ஒப்படைத்திருந்த அமெரிக்கர்கள் மீண்டும் தமது கவனத்தை குடியரசுக் கட்சியின் பக்கம் திருப்பி விட்டிருக்கிறார்கள்.
டொனால்ட் ட்ரம்பின் பிரசார அணுகுமுறைகளும் அவரது கொள்கைகளும், அமெரிக்காவுடன் கூட்டு வைத்திருக்கும் நாடுகளுக்கு அவ்வளவு ஏற்புடையதாக இருக்கவில்லை. அதனால் உலக நாடுகள் ஹிலாரியின் வெற்றியையே பெரும்பாலும் எதிர்பார்த்திருந்தன.
ஹிலாரியின் தோல்வியும், ட்ரம்பின் வெற்றியும், உலகம் முழுவதையும் அதிர்ச்சியோடு தான் பார்க்க வைத்திருக்கிறது. இலங்கைக்கும் இது விதிவிலக்கான விடயம் அல்ல.
அதிலும் தமிழர் தரப்புக்கு அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது என்பது உண்மை.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், 2009ஆம் ஆண்டு தொடக்கம் பதவியில் இருக்கும் ஒபாமா அரசாங்கம், கடந்த எட்டு ஆண்டுகளாக- கடைப்பிடித்து வரும் இலங்கை தொடர்பான கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற பரவலான நம்பிக்கை காணப்படுகிறது.
குறிப்பாக, தமிழர் விவகாரங்களில் இந்த ஆட்சிமாற்றத்தின் தாக்கத்தை வலுவாக உணரக்கூடிய நிலை இருக்கும் என்றே கருதப்படுகிறது.
கடந்த மூன்று தசாப்தங்களில் அமெரிக்காவில் குடியரசுக் கட்சி ஆட்சியில் இருந்த காலகட்டங்களில் இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான உறவுகள் இருந்து வந்தது வரலாறு.
டொனால்ட் றீகன் ஆட்சியில் இருந்த போது, ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கத்துடன் நெருக்கமான உறவுகளை வைத்திருந்தார். இலங்கையில் அமெரிக்கா தளம் அமைக்கப் போகிறது என்று கருதும் அளவுக்கு அந்த உறவுகள் வலுவாகக் காணப்பட்டன.
அதற்குப் பின்னர், குடியரசுக் கட்சியின் சார்பில் ஜோர்ஸ் டபிள்யூ புஷ் பதவியில் இருந்த காலத்திலும், பின்னர் அவரது மகன் ஜோர்ஜ் புஷ் ஜுனியர் பதவியில் இருந்த காலத்திலும் இலங்கை அரசாங்கங்களுடன் நெருக்கமான உறவுகள் இருந்தன.
ஜோர்ஜ் புஷ் ஜுனியரின் பதவிக்காலத்தில் இலங்கையில் ஆட்சி அமைத்திருந்த ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் மிக நெருக்கமான செயற்பட்டிருந்தது அமெரிக்கா. அந்தக் காலகட்டத்தில் தான், விடுதலைப் புலிகளுக்கு எதிரான சர்வதேச வலைப்பின்னல் உருவாக்கப்பட்டது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு உதவிய பல்வேறு காரணிகளுக்குப் பிள்ளையார் சுழி போடப்பட்டு, அடித்தளம் இடப்பட்டது ஜோர்ஜ் புஷ் ஜுனியரின் ஆட்சிக்காலத்தில் தான்.
எனவே தான், டொனால்ட் ட்ரம்புக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில்- குடியரசுக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்கா வழங்கிய இராஜதந்திர மற்றும் புலனாய்வு உதவிகள், தனது அரசாங்கம் புலிகளைத் தோற்கடிக்க உதவியது என்பதை நினைவுபடுத்தியிருக்கிறார் மகிந்த ராஜபக்ச.
இதனால், மீண்டும் குடியரசுக் கட்சி ஆட்சிக்கு வரவுள்ளதும், ஜே.ஆர்.ஜயவர்த்தன, ரணில் விக்கிரமசிங்க போன்ற ஐதேக ஆட்சிக்காலங்களில் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதிகள் இலங்கையுடன் பேணிவந்த நெருக்கமான உறவுகளையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கையுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
கடந்த ஆண்டு நடந்த ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஜனநாயக கட்சியின் ஆட்சிக்காலத்திலேயே அமெரிக்க – இலங்கை உறவுகள் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கின்ற சூழலில் தான் குடியரசுக் கட்சி அதிகாரத்தைப் பிடித்திருக்கிறது.
குடியரசுக் கட்சி ஒருபோதும் இந்தியப் பெருங்கடலின் முக்கியத்துவத்தையோ, இலங்கையின் கேந்திர அமைவிடத்தையோ குறைத்து மதிப்பிடுவதில்லை. அதனால் தான், குடியரசுக் கட்சி அதிகாரத்தில் இருந்த போதெல்லாம் இலங்கையுடன் நெருக்கமான உறவுகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன.
இலங்கையில் போர் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த போது தான், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஒபாமா ஆட்சிக்கு வந்தார். அவரது அரசாங்கம் இலங்கையுடன், குறிப்பாக மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் கடைப்பிடித்த கொள்கை- சற்று இறுக்கமானதாகவே இருந்தது.
குறிப்பாக போருக்குப் பின்னர், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்பட்ட நெருக்கத்தை இலக்கு வைத்து, ஒபாமா நிர்வாகம், மனித உரிமைகள் விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தது.
பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நிலையான அமைதி ஆகிய விடயங்களை முன்னிறுத்தி இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா செய்த தலையீட்டை, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் விரும்பவில்லை. இதன்காரணமாக அமெரிக்க – இலங்கை உறவுகள் சீர்குலைந்து போயின.
மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து வெளியேறிய போது இரண்டு நாடுகளுக்கும் .இடையிலான உறவுகள் மிக மோசமான நிலையிலேயே இருந்தன.
சீனாவுடன் நெருங்கியிருந்த மகிந்த அரசாங்கத்தை தனது வழிக்குத் திருப்புவதற்காக, ஜெனிவாவில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் விவகாரங்களை முன்னிலைப்படுத்தி அமெரிக்கா தீர்மானங்களைக் கொண்டு வந்து தலைவலி கொடுத்தது.
கடந்த ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திலும் கூட அமெரிக்காவின் பங்களிப்புகளை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.
ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், தற்போதைய அரசாங்கம், ஒபாமா நிர்வாகத்துடன் முழுமையாக ஒத்துழைக்க இணங்கிய பின்னர், ஜெனிவா அழுத்தங்கள் குறையத் தொடங்கியுள்ளன.
இப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக ஐ.நாவில் போய் எமக்கு எதிரிகளே இல்லை, யாரும் அழுத்தங்கள் கொடுக்கவில்லை என்று கூறும் அளவுக்கு நிலைமைகள் தலைகீழாக மாறியுள்ளன.
என்றாலும், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் விடயங்கள் சார்ந்து- அமெரிக்கா முழுமையான அளவுக்கு இல்லாவிடினும், பெயரளவுக்கேனும் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்து வந்திருக்கிறது.
ஹிலாரி கிளின்டன் ஆட்சிக்கு வந்தால், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் விவகாரங்கள் போன்றவற்றில் கூடுதல் ஈடுபாடு காட்டுவார் என்ற நம்பிக்கை தமிழர் தரப்பிடம் காணப்பட்டது.
ஏனென்றால், அவர் இராஜாங்கச் செயலராகப் பதவியில் இருந்த காலகட்டத்தில் தான், பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் முதலாவது தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டது.
ஒபாமாவின் முதல் ஆட்சிக்காலத்தில் அதிகாரத்தில் இருந்த ஹிலாரி கிளின்டன், சமந்தா பவர், சூசன் ரைஸ் ஆகிய மூன்று பெண்கள், இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு காரணமாக இருந்தனர்.
அந்த வகையில் ஹிலாரி அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவானால், பொறுப்புக்கூறல் விவகாரத்தில் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுப்பார் என்ற நம்பிக்கை தமிழர்தரப்பில் சிலரிடம் இருந்தது.
நல்லூரில் சில தமிழ் அரசியல்வாதிகள் தேங்காய் உடைத்ததற்கு அந்த நம்பிக்கையே காரணம்.
அமெரிக்க ஜனாதிபதியாக ஹிலாரி பதவிக்கு வந்தாலும் கூட, இலங்கை தொடர்பான கடுமையான போக்கை அமெரிக்கா மீண்டும் கடைப்பிடிப்பதற்கான வாய்ப்புகள் அரிதாகவே இருந்தன.
ஆனால், அவர் தோல்வியடைந்து, எப்போதும் இலங்கை அரசுடன் நெருக்கமான உறவைப் பேணி வந்துள்ள குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியிருப்பது, பொறுப்புக்கூறல் பற்றிய அழுத்தங்களில் இருந்து இலங்கை முற்றாக விடுபடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தலாம்.
கடந்த பல ஆண்டுகளாகவே இலங்கை அரசாங்கத்துக்கு ஜெனிவா ஒரு சோதனைக்களமாகவே இருந்து வந்திருக்கிறது.
கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கை அடுத்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஆனாலும் ஜெனிவாவில் கடந்த ஆண்டு கொடுத்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றாத நிலையே தொடர்கிறது.
இத்தகைய நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு அடுத்த ஆண்டு முழு அளவில் இல்லாவிடினும், கணிசமான நெருக்கடிகள் இருக்கும் என்றே கருதப்பட்டது.
அதுவும் மீண்டும் மூன்று ஆண்டுகளுக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடாக அமெரிக்கா தெரிவாகிய நிலையில், இலங்கைக்கு மென் அழுத்தங்களாவது கொடுக்கப்படும் என்று கருதப்பட்டது.
ஏனென்றால் அமெரிக்கா தான் இலங்கையில் பொறுப்புக்கூறலை முன்னிறுத்தி ஜெனிவாவில் தீர்மானங்களைக் கொண்டு வந்திருந்தது.
ஆனால் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கின்ற ஆட்சிமாற்றம் ஜெனிவா கூட்டத்தொடரில் பெரியளவில் எதிரொலிக்கும் என்று கருதப்படுகிறது. இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் விடயத்தில் இருந்து அமெரிக்கா ஒதுங்கிக் கொள்ளக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது, சர்வதேச சமூகத்துக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாமல் இழுத்தடித்து வரும் இலங்கைக்கு இன்னும் அதிகமான பலத்தைக் கொடுக்கும்.
வாக்குறுதிகளில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைப்பதற்கு அமெரிக்க ஆட்சி மாற்றம் சாதகமாக அமையலாம்.
டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திகளில் இலங்கையின் இந்த எதிர்பார்ப்பு பிரதிபலித்திருக்கிறது.
வெளிநாடுகளின் விவகாரங்களில் தலையிடாத கொள்கையை ட்ரம்ப் கடைப்பிடிப்பார் என்ற நம்பிக்கையை மகிந்த ராஜபக்சவும் வெளியிட்டிருக்கிறார். ராஜித சேனாரத்னவும் அதே கருத்தைத் தான் வெளியிட்டிருக்கிறார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ட்ரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து செயற்படுவதற்கான அழைப்பை விடுத்திருக்கிறார்.
ஆக மொத்தத்தில், சர்வதேச அரங்கில் இலங்கை அரசுக்கு சாதகமான ஒரு சூழலை மீண்டும் உருவாக்கியிருக்கிறது அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்.
இந்த மாற்றம், சர்வதேச பங்களிப்புடன் பொறுப்புக்கூறல், நீதி, அரசியல் தீர்வு போன்றவற்றை எட்ட முடியும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தமிழர் தரப்புக்கு சாதகமானதாக இருக்காது என்பது உறுதி.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்








