Breaking News

புத்தர் சிலைக்கு பின்னாலுள்ள அரசியல்

ஊருக்குள் பெரிய ஆஜா­ன­பா­கு­வான ஆட்­க­ளாக
தம்மைக் காட்டிக் கொள்ளும் ‘மைனர்கள்’, வெளி­யூ­ருக்கு சென்று அவ­மா­னப்­பட்டு வரு­வார்கள். ஊர் எல்­லைக்குள் வந்­ததும், மீண்டும் வீரமும் தற்­பெ­ரு­மையும் பேசத் தொடங்­கி­ வி­டு­வார்கள். தனது உடம்பில் இருப்­பது அடி­பட்ட காய­மல்ல, மாறாக வெளியூர் சண்­டி­ய­னுக்கு அடித்­த­போது ஏற்­பட்ட கீறல்கள் என்­பது போலி­ருக்கும் அவர்­க­ளது பேச்­சுக்கள்!

அம்­பாறை மாவட்­டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பிர­தே­ச­மான மாணிக்­க­ம­டுவில் புத்தர் சிலை வைக்­கப்­பட்ட விடயம் கடந்த இரு வாரங்­க­ளாக சர்ச்­சை­க­ளையும் வார்த்தை மோதல்­க­ளையும் எல்லா மட்­டங்­க­ளிலும் ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது. இறக்­காமம் பிர­தேச செய­லகப் பிரி­வுக்­குட்­பட்ட மாணிக்­க­மடு எனும் குக்­கி­ரா­மத்தில் 101 தமிழ் குடும்­பங்கள் வசிக்­கின்­றன. இதற்­க­ருகே முஸ்லிம் கிரா­மங்கள் உள்­ளன. 

அதே­போன்று, மாணிக்­க­ம­டுவில் இருந்து சில கிலோ­மீற்­றர்கள் தொலைவில் தீக­வாபி விகா­ரையும் அதைச் சூழ புனி­த பூமியும் உள்­ளது. ஒரு சிங்­களக் குடும்­ப­மேனும் நிரந்­த­ர­மாக வசிக்­காத மாணிக்­க­மடு பிர­தே­சத்தில் உள்ள மாயக்­கல்லி மலையில் இருத்­தப்­பட்­டுள்ள புத்தர் சிலை, சிறு­பான்மை மக்­க­ளி­டையே பல்­வேறு மனப் போராட்­டங்­களை உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றது. புத்தர் போதித்த அமை­தியும் இன­சௌ­ஜன்­யமும் அவ­ரது சிலை விவ­கா­ரத்­தி­னா­லேயே சிதை­வ­டைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்­பட்­டுள்­ளது.

பல்­வேறு கார­ணங்கள்

இது தொடர்பில் அம்­பாறை மாவட்ட செய­ல­கத்தில் இடம்­பெற்ற விசேட கூட்­டத்­திலோ கடந்த இரு தினங்­க­ளுக்கு முன் நடை­பெற்ற மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழு கூட்­டத்­திலோ சிறு­பான்மை மக்கள் ஆறுதல் கொள்­ளு­ம­ள­வுக்கு எவ்­வித உடன்­பா­டு­களும் எட்­டப்­ப­ட­வில்லை. மாறாக, சம்­பந்­தப்­பட்ட பிக்­கு­க­ளுக்கு எதி­ராக சட்டம் தன் கட­மையைச் செய்யும் என்று முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்க, அவ்­வி­டத்­திற்கு மீண்டும் ஒரு குழு­வினர் வந்து அங்கு மடா­லயம் (சத்­திரம்) அமைப்­ப­தற்­கான காணி தொடர்­பாக ஆராய்ந்து சென்­றுள்­ளனர். சிங்­கள கடும்­போக்கு வாதத்தின் முன்னால், சிறு­பான்மை மக்­களின் உணர்­வுகள் எல்லாம் தோற்றுப் போவதை மீண்டும் காலம் நமக்கு உணர்த்திக் கொண்­டி­ருக்­கின்­றது என்றால் மிகை­யில்லை.

இந்த சிலை வைப்­புக்கு பல கார­ணங்கள் இருக்­கலாம் என்று அவ­தா­னிகள் குறிப்­பி­டு­கின்­றனர். முத­லா­வது, தமி­ழர்­க­ளி­னதும் முஸ்­லிம்­க­ளி­னதும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஏக்கர் காணி­களை கைய­கப்­ப­டுத்­தி­யி­ருக்கும் சிங்­களப் பேரி­ன­வாதம், அம்­பாறை மாவட்­டத்தில் சிறு­பான்மை மக்கள் வாழும் பிர­தே­சங்­க­ளுக்குள் மேலும் ஊடு­ருவி கால­ஓட்­டத்தில் காணி­களை ஆக்­கி­ர­மிப்­ப­தற்­கான ஆரம்ப கரு­வி­யாக இதனை பயன்­ப­டுத்­தலாம். புத்தர் சிலையை வைத்து அங்கு மடா­ல­யத்தை கட்டி, பின்னர் தீக­வா­பிக்கும் இதற்கும் முடிச்சுப் போட்டு சிங்­கள குடி­யேற்­றங்­களை மேற்­கொள்­வ­தற்­கான முதற்­கட்ட திட்­ட­மாக இது இருக்­கலாம். சிங்­க­ள­வர்­க­ளையும் முஸ்­லிம்­க­ளையும் முரண்­பட வைத்து அதில் அர­சியல் இலாபம் தேடு­வ­தற்­கான முயற்­சி­யாகக் கூட இருக்­கலாம்.

இவற்­றை­யெல்லாம் மீறி, மாணிக்­க­மடு புத்தர் சிலை விவ­காரம் தொடர்­பான மேற்­கு­றிப்­பிட்ட நமது அனு­மா­னங்கள் வெறும் கற்­ப­னை­க­ளாக பொய்த்தும் போகலாம். அதா­வது, இது வெறு­மனே ஒரு மதம் சார்ந்த அப்­பா­வித்­த­ன­மான செயற்­பா­டாக இது இருக்­கலாம். பௌத்த மதத்தை வழி­ப­டு­வ­தற்­கா­கவும் அந்த மதக் கொள்­கையை பரப்பும் நோக்­கிலும் மட்­டுமே இக்­கா­ரியம் செய்­யப்­பட்­டி­ருந்தால், மகிழ்ச்­சியே! அவ்­வாறே நடந்­தி­ருக்­கு­மென்றால் தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் அச்­சப்­ப­டு­வ­தற்கு எந்த முகாந்­தி­ரங்­களும் இருக்­காது.

யதார்த்­தத்தை புரிதல்

உண்­மையில், முஸ்­லிம்கள் வாழ்­கின்ற பல பிர­தே­சங்­களில் பள்­ளி­வா­சல்­களை கட்­டி­யுள்­ளார்கள். சில குடும்­பங்­களே வாழ்­கின்ற அம்­பாறை நக­ரிலும் ஒரு பள்­ளி­வாசல் சில கட்­டுப்­பா­டு­க­ளுடன் இயங்­கு­கின்­றது. அது­போல, சிங்­கள மக்கள் செறி­வாக வாழும் மாத்­தறை மாவட்­டத்தில் தொண்­டேஸ்­வரம் எனப்­படும் தமி­ழர்­களின் வர­லாற்றுக் கோவில் ஒன்றின் தட­யங்கள் இருட்­ட­டிப்புச் செய்­யப்­பட்­டாலும் இன்றும் மாத்­த­றையில் உள்ள கோவிலில் தமி­ழர்கள் வழி­ப­டு­கின்­றனர். 

அதேபோல் சிறு­பான்மை மக்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்ட பிர­தே­சங்­க­ளான பொத்­துவில், அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, காரை­தீவு, தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழகம் மற்றும் ஒலுவில் துறை­முகம் என பல இடங்­களில் பௌத்த விகா­ரைகள் அல்­லது புத்தர் சிலைகள் நிறுவப் பெற்­றுள்­ளன. தமி­ழர்­களின் கட்­டுப்­பாட்டில் உள்ள வட­பு­லத்தில் கூட புத்தர் சிலை­களும் விகா­ரை­களும் சாந்­த­மாக இருக்­கின்­றன. அந்த அடிப்­ப­டையில் நோக்­கினால் மாணிக்­க­மடு புத்தர் சிலை குறித்து குழப்­ப­ம­டையத் தேவை­யில்லை என்று தோன்­று­கின்­றது.

ஆனால், தமி­ழர்­களோ முஸ்­லிம்­களோ தமது மக்­களில் ஒரு­வ­ரேனும் நிரந்­த­ர­மாக வாழாத பிர­தே­சத்தில் தமது மத அனுஷ்­டான மையங்­களை நிறு­வு­வது இல்லை. புதை­பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் நிலங்­களை அடை­யா­ளப்­ப­டுத்­து­வதும் அதை தோண்­டு­வதும் சிறு­பான்மை மக்­களின் பழக்­கமும் இல்லை. அவ்­வாறு இலங்­கையின் நிலத்தை தோண்டிக் கொண்டே போனால், ஒரு­வேளை இலங்­கையில் தற்­போது உரிமை கொண்­டாடும் எந்த இனங்­க­ளுக்கும் இந்­நிலம் சொந்­த­மில்­லாமல் கூட போய்­வி­டலாம் என்­பதை சிறு­பான்­மை­யினர் அறி­வார்கள். அதே­போன்று சிறு­பான்­மை­யினர் தமது வழி­பாட்­டி­டத்தை அமைத்­து­விட்டு, பிறகு அங்கு அடாத்­தாக நிலங்­களைப் பிடித்த வர­லாறு கிடை­யாது. ஆனால், சிங்­கள மேலா­திக்­க­வா­திகள் அதைச் செய்­தி­ருக்­கின்­றார்கள். அவ்­வா­றான நிறைய அனு­ப­வங்­கள் சிறு­பான்மை மக்­க­ளுக்கு இருக்­கின்­றன.

“மாணிக்­க­ம­டுவில் புத்தர் சிலையும் மடா­ல­யமும் மட்­டுமே நிறு­வுவோம். அங்கு இடங்­களை ஆக்­கி­ர­மிப்­பதோ சிங்­க­ள­வர்­களை குடி­யேற்­று­வதோ எமது நோக்­க­மல்ல” என்று சிங்­கள தரப்­பினர் கூறு­வது சற்று ஆறு­த­ல­ளிக்­கின்­றது. இருப்­பினும், “அம்­பாறை மாவட்­டத்தில் பல இடங்கள் பௌத்த புரா­தன இடங்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன” என பிக்கு ஒருவர் கூறி­யுள்­ள­மையும், “கல்­முனை, பொத்­துவில் உள்­ள­டங்­க­லாக (முஸ்­லிம்கள் வாழும்) ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் காணிகள் தீக­வா­பிக்கு சொந்­த­மாக இருந்­துள்­ளன” என்று அமைச்சர் தயா­ க­மகே ஆக்­ரோ­ச­மாக கூறு­வதும், மேற்­சொன்ன ஆறு­தலை இல்­லாது செய்­து­வி­டு­கின்­றன. ‘நாங்கள் விரும்­பினால் எல்லா இடத்­திலும் சிலை வைப்போம், காணி­களை கைய­கப்­ப­டுத்­துவோம்’ என்று இன­வாதம் சொல்­லாமல் சொல்­வது போலுள்­ளது.

அவர்­க­ளது நிலைப்­பாடு

அந்த வகையில், மாணிக்­க­ம­டுவில் புத்தர் சிலையை அடாத்­தாக நிறு­விய சம்­ப­வத்­திற்குப் பின்­ன­ணியில் அம்­பாறை மாவட்­டத்தைச் சேர்ந்த சிங்­கள அமைச்சர் ஒருவர் உள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. இந்­நி­லையில், அமைச்சர் தயா கமகே, இந்த தொப்­பியை தனக்கு அள­வா­ன­தென போட்டுக் கொண்­டுள்­ள­தாக தெரி­கின்­றது. இவர் ஐ.தே.க.வுக்­காக கடந்த காலங்­களில் பெரு­ம­ளவு செலவு செய்­துள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. கடந்த தேர்­தலில் வெற்­றி­யீட்­டிய தயா­வுக்கு முழு அமைச்சைக் கொடுத்த ஐ.தே.கட்சி, அவ­ரது மனை­விக்கு தேசி­யப்­பட்­டியல் எம்.பி.பத­வியும் அரை அமைச்சும் கொடுத்து அழகு பார்க்­கின்­றது. இதி­லி­ருந்து, தயா கமகே அக்­கட்­சிக்கு எந்­த­ள­வுக்கு முக்­கி­யத்­து­வ­மா­னவர் என்­பதை அறிந்து கொள்­ளலாம்.

தயா கமகே கடந்த பாரா­ளு­மன்ற பொதுத் தேர்­தலில் வெற்­றி­பெ­று­வ­தற்கு முக்­கிய கார­ணி­யாக அமைந்­தது தமிழ், முஸ்லிம் மக்­களின்; வாக்­கு­க­ளாகும். தேர்தல் பிர­சாரக் காலத்தில் தன்னை சிறு­பான்மை மக்­களின் தோழ­னாக காட்டிக் கொண்ட இவர், காரியம் முடிந்த பிறகு தான் சார்ந்த சமூ­கத்­திற்­காக சிறு­பான்மை மக்­களின் உணர்­வு­களை காயப்­ப­டுத்தும் நிலைக்கு சென்­றி­ருக்­கின்றார். 

இதே­வேளை, மாணிக்­க­மடு புத்தர் சிலை விவ­கா­ரத்தில் முஸ்லிம் அர­சி­யலின் செயற்­பாடு வழக்கம் போல நகைப்­புக்­கி­ட­மா­கவும் சிலநேரங்களில் விச­ன­மூட்­டு­வ­தா­கவும் இருக்­கின்­றது. அம்­பாறை மாவட்ட செய­ல­கத்தில் இடம்­பெற்ற கூட்­டத்தில், ‘பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஐ.எம்.மன்சூர் சிலை வைப்­புக்கு சம்­மதம் தெரி­வித்­த­தாக’ மாவட்ட செய­லாளர் கூறினார் என்று மாகாண சபை உறுப்­பினர் எம்.எஸ்.உது­மா­லெப்பை உட்­பட அக்­கூட்­டத்தில் கலந்­து­கொண்ட பலர் கூறி­யுள்­ளனர். 

அதன்­பி­றகு இறக்­காமம் பிர­தேச அபி­வி­ருத்திக் கூட்­டத்தில் மன்சூர் எம்.பி. தெரி­வித்த கருத்­துக்­களும் கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளன. இந்த சர்ச்­சை­க­ளுக்கு பின்னர், “நான் அவ்­வாறு சம்­மதம் தெரி­விக்­க­வில்லை” என்று அவர் மறுப்புத் தெரி­வித்­துள்ளார்.

அவர் சம்­மதம் தெரி­வித்­தாரா இல்­லையா என்­பதில் சந்­தே­கங்கள் இருந்­தாலும், இறக்­கா­மத்தில் ஆற்­றிய உரை ஒளிப்­பட வடிவில் இருப்­பதால் சந்­தே­கங்கள் எது­வு­மில்லை. “இது பௌத்த நாடு அவர்கள் எங்கு வேண்­டு­மென்­றாலும் சிலை வைக்­கலாம். அதை எந்த ராசா வந்­தாலும் அகற்ற முடி­யாது” என்ற தொனியில் இறக்­காம கூட்­டத்தில் மன்சூர் எம்.பி. தெரி­வித்­தி­ருந்தார். இது கடு­மை­யான விமர்­ச­னங்­களை சந்­தித்­துள்­ளது. 

அத்­துடன், அவ­ரது கட்­சி­யான முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ‘தடையை மீறி புத்தர் சிலையை வைத்­த­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது’ என்று அறிக்கை விட்டுக் கொண்­டி­ருந்த நேரத்தில் மன்சூர் வெளி­யிட்ட இக்­க­ருத்து ஹக்­கீமின் முயற்­சி­க­ளையும் கேலி செய்­வ­தற்கு ஒப்­பா­ன­தா­கவே அமைந்­தது. இதனை மன்சூர் பின்னர் உணர்ந்­தி­ருக்­கலாம். அதன்­பி­ர­கா­ரமே “நான் சம்­மதம் தெரி­விக்­க­வில்லை “என்று கூறி, தனது அர­சியல் இருப்பின் கௌர­வத்தை பாது­காத்துக் கொள்ள அவர் முயற்சி செய்­வ­தாக சொல்­லப்­ப­டு­கின்­றது.

எது எவ்­வா­றி­ருப்­பினும், மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் இவ்­வி­வ­கா­ரத்தில் ஒரு சிறந்த முயற்­சியை மேற்­கொண்­டி­ருக்­கின்றார் என்றே சொல்ல வேண்டும். அமைச்சர் மனோ கணே­ச­னுடன் பிர­த­மரை சந்­தித்து இவ்­வி­ட­யத்தை எடுத்­து­ரைத்­துள்ளார். ஹக்கீம் போன்­ற­வர்கள் மேற்­கொண்­டுள்ள இம்­மு­யற்சி பாராட்­டப்­பட வேண்­டி­யது. ஒரு­கோ­ணத்தில் பார்த்தால் இதுவும் கூட ஒரு­வகை அர­சி­யல்தான் என்­றாலும், இதில் பெரும்­பாலும் சமூக நலனே உள்­ளது என்­பதால், இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் சமூ­க­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட அர­சி­ய­லாக கொள்­ளப்­ப­டு­கின்­றன.

தமிழ் அர­சி­யல்­வா­தி­களின் முயற்சி

மாணிக்­க­மடு விவ­காரம் ஒரு பெரிய பிரச்­சி­னை­யாக போய்க் கொண்­டி­ருக்க வடக்கு, கிழக்கை மைய­மாகக் கொண்ட தமிழ் அர­சி­யல்­வா­திகள் இது விட­யத்தில் பிடி­கொ­டுக்­காமல் செயற்­ப­டு­கின்­றார்­களோ என்று எண்ணத் தோன்­று­கின்­றது. இது முற்­று­மு­ழு­தாக ஒரு தமிழ் பிர­தேசம் என்­ற­ப­டியால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு இவ்­வி­ட­யத்தில் பாரிய பொறுப்­பி­ருக்­கின்­றது. இங்­குள்ள, அக்­கட்­சியின் மாகாண சபை உறுப்­பினர் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் போன்றோர் காத்­தி­ர­மான முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்ற போதும், ஒரு கட்சி என்ற அடிப்­ப­டையில் த.தே.கூட்­ட­மைப்பு காத்­தி­ர­மான நட­வ­டிக்கை எடுத்­த­தாக அறியக் கிடைக்­க­வில்லை. “வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­ப­டா­விட்டால் கிழக்கு சிங்­க­ள­ம­ய­மாகி பறி­போய்­விடும்” என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் சொல்லி சில நாட்­க­ளுக்குள் இச்­சம்­பவம் இடம்பெற்றிருக்கின்றது. அவர் முன்னெச்சரிக்கை செய்ததுபோல் கிழக்கை பறித்தெடுக்கும் ஒரு வேலைத்திட்டமாகக் கூட இது இருக்கலாம் என்ற கோணத்திலும் இதை அணுக வேண்டியுள்ளது.

மாணிக்கமடு விவகாரத்தை த.தே.கூ. ஒரு சிறிய விடயமாக கருதக்கூடும். இதை விட பெரிய விடயங்கள் நடைபெறும் காலத்தில் இதற்குப் பின்னால் நேரத்தை செலவளிக்க வேண்டியதில்லை என்று எண்ணலாம். வடகிழக்கு இணைப்பின் அவசியம் குறித்து இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளட்டும் என்றும் நினைக்கக் கூடும். ஆனால், இவ்விடயத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது. வடக்கில் புத்தர் சிலை வைக்கப்பட்டால் எவ்வாறு தமிழ் அரசியல்வாதிகள் செயற்படுவார்களோ அதே மாதிரி கிழக்கிலும் உயர் அக்கறையை வெளிப்படுத்த வேண்டுமென்றே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதேவேளை இவற்றையெல்லாம் மிகைத்த ஒரு அரசியலை அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது. எனவே, தமிழ்,முஸ்லிம் மக்களும் அவர்கள்தம் அரசியல்வாதிகளும் இது விடயத்தில் போதியளவு அக்கறை செலுத்த வேண்டும். நமக்குள் முரண்பட்டுக் கொண்டிருப்பது பொது எதிரியின் ஆக்கிரமிப்பு பலத்தை அதிகரிப்பதாக அமையும். புத்தர் தொடர்பில் சிறுபான்மையினருக்கு மரியாதை உள்ளது. ஆனால், புத்தர் சிலைக்குப் பின்னால் உள்ள இனவாதிகளின் ‘அரசியல்’ குறித்து விழிப்பாக இருக்க வேண்டும். ஆனாலும், அரசியல்மயமாகியுள்ள இனவாதத்தையும் சிலைக்குப் பின்னால் உள்ள அரசியலையும் மிக நூதனமாக கையாள வேண்டும்.

பொருத்தமற்ற விதத்தில் ஆளுக்கொரு மருந்தைக் கட்டும் முயற்சியில், காயத்தை புண்ணாக்கிவிடக் கூடாது.

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்