Breaking News

27 வருடங்களின் பின்னர் சொந்த ஊர் திரும்பிய மக்கள்



யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் கடந்த 27 வருடங்களாக முடக்கப்பட்டிருந்த ஊரணி படகுத்துறை 2 ஏக்கர் காணியும் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின் கீழ் இந்த பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த ஊறணி, காங்கேசன்துறை, தையிட்டி தெற்கு உள்ளிட்ட சில பகுதிகள் கடந்த ஆண்டு மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

குறித்த பகுதி மக்கள் தங்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்காக கடற்றொழிலை செய்வதற்கு கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கரையோர பகுதியை விடுவித்து தருமாறு மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் தேசிய ஒருமைப்பாட்டுக்கும், நல்லிணக்கத்திற்குமான அமைச்சினால் நடை முறைப்படுத்தப்படும் தேசிய நல்லிணக்கவாரத்தை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு ஊறணி பகுதியில் வைத்து குறித்த பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகனிடம் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சின் செயலாளர் எஸ்.சிவஞானசோதியினால் குறித்த காணி கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ்சேனநாயக்க மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலர் எஸ்.சிவமோகனன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

கடற்றொழில் செய்வதற்காக சுமார் 400 மீற்றர் நீளமான கரையோர பகுதியும், ஏக்கர் நிலமும் இன்றைய தினம் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

காணி விடுவிக்கப்பட்டதன் மூலம் மயிலிட்டி, ஊரணி மற்றும் நல்லிணக்கபுரம் பகுதிகளை சேர்ந்த மக்கள் நன்மையடையவுள்ளனர்.

அத்துடன் காணி விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் இன்று தைப் பொங்கல் பண்டிகையையும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதேவேளை, 27 வருடங்களாக இடம்பெயர்ந்து தாம் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் நிலையில் தங்களுடைய நிலத்தில், தங்களுடைய வீட்டில் சிங்கள மக்கள் தங்கியிருப்பதாக வலிகாமம், வடக்கு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து 27 வருடங்கள் கடந்த போதிலும் தமது வீடுகளுக்கு செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலையில் தாம் உள்ளதாகவும் வலிகாமம் வடக்கு மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, 27 வருடங்களின் பின்னர் தமது காணியை இராணுவத்தினர் விடுத்தமைக்கு காணி உரிமையாளர்கள் சிலர் நன்றி தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, பரம்பரை பரம்பரையாக மீன்பிடி தொழில் ஈடுபட்ட ஊரணி மற்றும் மயிலிட்டி மக்களின் காணிகள் விடுவிக்கப்படாமல் பிற பகுதிகள் விடுவிக்கப்பட்டமை ஏமாற்றமளிப்பதாக வலி வடக்கு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு சங்க தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ள காணியானது இறங்கு துறையாக காணப்படவில்லையென தெரிவித்த ஊறணியைச் சேர்ந்தம அருட்தந்தை அன்ரனி பாலா, அப்பகுதியிலுள்ள நான்கு இறங்கு துறைகளையும் அரசாங்கம் விரைவில் விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, மைத்திரி ரணில் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து 2500 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் 3000 ஏக்கர் காணி இன்னும் விடுவிக்கப்படவுள்ளது. இவற்றில் 1000 த்திற்கும் மேற்பட்ட காணிகள் பலாலி விமான நிலையத்திற்காக சுவிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.