Breaking News

ஈரானுக்கான பயணத்தை ரத்துச் செய்தார் ஜனாதிபதி



சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அடுத்தவாரம் ஈரானுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பயணத்தை ரத்துச் செய்துள்ளார்.

எதிர்வரும் 21ஆம் நாள் சிறிலங்கா அதிபர், ஈரானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.

எனினும், சிறிலங்கா அதிபரால், ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்களில், வேறு முக்கிய பணிகள் இருப்பதால், இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியாதிருப்பதாக ஈரானிய அதிகாரிகளுக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளை, எதிர்வரும் 20 ஆம் நாள் அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கும் நிகழ்வில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் விருப்பம் கொண்டிருந்தார். இந்த நிகழ்வுக்கு வெளிநாட்டு விருந்தினர்களை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை என்று வெளிவிவகார கொள்கை ஆலோசகர்கள் தெரிவித்ததையடுத்து, அந்த திட்டத்தையும் அவர் கைவிட்டுள்ளார்.

அதேவேளை, வரும் மார்ச் மாதம் சிறிலங்கா அதிபர் ரஷ்யாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். மார்ச் 21ஆம் நாள் தொடக்கம் 4 நாட்கள் அவர் ரஷ்யாவில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு, நேரடியாக டாக்காவுக்கு செல்லும் சிறிலங்கா அதிபர், மார்ச் 26ஆம் நாள் நடக்கும் பங்களாதேசின் சுதந்திர நாள் விழாவில் பங்கேற்கவுள்ளார்.