கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்
முல்லைத்தீவு - கேப்பாபுலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இன, மத வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு எதிராக தென்பகுதி மக்கள் குரல் கொடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் கேட்டுக்கொண்டார்.
முல்லைத்தீவு - கேப்பாபுலவு - பிலவுக்குடியிருப்பு மக்களின் காணி விடுவிப்பு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பில் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - காந்தி பூங்காவிற்கு முன்பாக காலை 10.30 க்கு இடம்பெற்ற இந்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
சிங்கள அரச அடையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் சொந்த நிலங்களை மீட்க்கும் போராட்டத்தின் ஆரம்பமே இது என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வந்தாறுமூலை கிராமத்தைச் சேர்ந்த பு. சசிகரன் தெரிவித்தார்.
பொறுப்புகூறல் விடயத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றி வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ரி.சுரேஸ் குற்றஞ்சாட்டினார்.
தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டால் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை நடத்த நேரிடும் என கிழக்கு பல்கலைக்கழக பொது மாணவர் ஒன்றிய தலைவர் பே. பிரசாத் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் பேசம் மக்களின் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இ. துரைரெட்ணம் வலியுறுத்தியுள்ளார்.








