புதிய கட்சியைத் தொடங்கினார் கருணா
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உப தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், நேற்று புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று விடுதியொன்றில் நடத்திய சந்திப்பின் போதே அவர் புதிய கட்சியை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில், இந்தப் புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சியின் பொதுச்செயலராக கமலதாசன் அதிகாரபூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கருணா அறிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலும், அரசியல் உரிமைகள் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலும் இந்தக் கட்சி உருவாக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை இந்தப் புதிய கட்சி நிரப்பும் என்றும் அவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற பின்னர், மகிந்த ராஜபக்ச அரசில் இணைந்து கொண்ட கருணாவை சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராக நியமித்திருந்தார்.
எனினும் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மாற்றங்கள் செய்யப்பட்ட போது, கருணாவிடம் இருந்து உபதலைவர் பதவி பறிக்கப்பட்டது.
இதையடுத்து, அரசியலில் ஓரம்கட்டப்பட்டிருந்த கருணா, கடந்த மாதம் 27ஆம் நாள், நுகேகொடவில் கூட்டு எதிரணியினர் நடத்திய பேரணியில் பங்கேற்று உரையாற்றியிருந்தார்.
எதிர்காலத்தில் தாம் அரசியலில் ஈடுபடுவதானால், மகிந்த ராஜபக்சவின் கீழேயே செயற்படுவேன் என்று இந்தப் பேரணியில் உரையாற்றியிருந்தார்.
இந்த நிலையிலே அவர், மட்டக்களப்பில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளார்.








