Breaking News

பூனையைக்கொண்டு பாலைப்பாதுகாப்பது போல் ஜனாதிபதியின் செயற்பாடு உள்ளது



கடந்த காலங்களில் அரச உத்தியோகத்தர் தமது நியமனங்கள், பதவி உயர்வுகள், வேதன உயர்வுகள் என்பனவற்றிற்கு அதிகாரிகளின் கைகளிலேயே தங்கியிருக்க வேண்டி இருந்தது. இவற்றைக் கருத்தில் எடுத்த ஜனாதிபதி சாதாரண அடிமட்ட உத்தியோகத்தர் மற்றும் ஊழியர்களை அழைத்து இவ்வாறான ஒரு நிகழ்வை அனைத்துத் திணைக்களங்களிலும் அரச நிறுவனங்களிலும் நடத்துமாறும் பணிப்புரை ஒன்றை விடுத்தார். எனினும் ஜனாதிபதியின் இந்த செயற்பாடு பூனையைக் கொண்டு பாலைப் பாதுகாக்கவைப்பது போல் எனக்குத் தெரிகிறது என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். உதவிஉள்ளூராட்சி ஆணையாளரின் அலுவலகத்தில், அரச உத்தியோகத்தர்களின் குறைகேள் நிகழ்வு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் நேற்று யாழ். உள்ளூராட்சி திணைக்களத்தில் காலை 9.30 மணியளவில் இடம் பெற்றது.

இதில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், பிரதம செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் ஆணையாளர், பிரதம கணக்காளர், உத்தியோகத்தர்கள், பிரதம செயலாளரின் கொத்தணியினர் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதில் கலந்து கொண்ட உத்தியோகத்தர்கள் தமது குறைகளை நேரடியாக முதலமைச்சருக்கு தெரிவித்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த முதலமைச்சர் கடந்த காலங்களில் அரச உத்தியோகத்தர் தமது நியமனங்கள், பதவி உயர்வுகள், வேதன உயர்வுகள் என்பனவற்றிற்கு அதிகாரிகளின் கைகளிலேயே தங்கியிருக்க வேண்டி இருந்தது. இவற்றைக் கருத்தில் எடுத்த ஜனாதிபதி சாதாரண அடிமட்ட உத்தியோகத்தர் மற்றும் ஊழியர்களை அழைத்து இவ்வாறான ஒரு நிகழ்வை அனைத்துத் திணைக்களங்களிலும், அரச நிறுவனங்களிலும் நடத்துமாறு பணிப்புரை ஒன்றை விடுத்தார். இதன் அடிப்படையில் இந்த நிகழ்வு பிரதம செயலாளரின் கொத்தணியினரை உள்ளடக்கியதாக உள்ளது.

இதில் பதவி உயர்வு, இடமாற்றம் போன்ற விடயங்களைக் கையாள மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் ஆணையாளர் மற்றும் பிரதிப் பிரதம செயலாளர் நிர்வாகம் அடங்கிய ஒரு சபையும், வேதனம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான விடயங்களுக்கு பிரதிப் பிரதம செயலாளர் நிதி மற்றும் உதவி பிரதிப் பிரதம செயலாளர் நிதி அவர்களைக் கொண்ட ஒரு குழுவும் ஏனைய விடயங்களுக்கு மூன்று பிரதிச் செயலாளர்களைக் கொண்ட குழுக்களாக மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடிமட்ட ஊழியர்களின் பிரச்சினைகள் வெளிக்கொணரப்படும்.

எனினும் ஜனாதிபதியின் இந்த செயற்பாடு பூனையைக் கொண்டு பாலைப் பாதுகாக்க வைப்பது போல் எனக்குத் தெரிகிறது. அதன் நன்மை, தீமைகளைப் பொறுமையாக இருந்துதான் பார்க்க வேண்டும். குறை கேட்கப் போகிறவர்கள் சுயமாக இயங்கும் வேறு அதிகாரிகள் அல்ல என்பது ஒரு குறையாகவே காணப்படுகின்றது. இதில் குறைகள் காணப்பட்டால் முதலமைச்சராகிய எனக்கு தெரியப்படுத்துவதன் மூலம் நிவர்த்தி செய்யமுடியும். கொஞ்சகாலத்தில் இன்று தொடங்கப்படும் இந்த நடைமுறை கைவிடப்படுமோ என்றும் யோசிக்கின்றேன். இருப்பினும் நியாயமான முறையிலும் சுயாதீனமாகவும் குறைகேள் அதிகாரிகள் செயற்படுவதன் மூலம் சிறந்த முறையில் திட்டத்தை முன்னகர்த்தலாம் என தெரிவித்தார்.