Breaking News

‘பிள்ளைகளை பறிகொடுத்து பாவிகளாய் தவிக்கின்றோம்’ – வயோதிப தாய் கதறல்



காணாமல் போன தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரிக்கை விடுத்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று மூன்றாவது நாளாக சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தமது இரு பெண் பிள்ளைகளை பறிகொடுத்துவிட்டு சோகம் தாளாது வயோதிய தாயொருவர் கதறி அழுதமை பார்ப்போர் கண்களையும் குளமாக்கியுள்ளது.

தமது பிள்ளைகளை தொலைத்துவிட்டு வயோதிப காலத்தில் வீதியில் இறங்கி போராடிவரும் தம்மை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் ஏனையோர் தம்முடன் வந்து உண்ணாவிரதம் இருந்தாவது தமது பிள்ளைகள் பற்றிய உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென அந்தத் தாய் கதறியழுதார்.

கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் இப் போராட்டத்தில், உறவுகளை தொலைத்த சுமார் 70 பேர் கலந்துகொண்டு தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இப்போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் போராட்ட வடிவம் வேறு விதமாக அமையுமென காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கத்தின் தலைவி தெரிவித்துள்ளார்.

தமது வாக்குகளால் நாடாளுமன்றம் சென்றவர்களில் சிலர் தமக்கு துரோகம் இழைத்து வருவதாக தெரிவித்த அவர், அரசியல்வாதிகள் மீது சிறிதும் நம்பிக்கை இல்லையென்றும் அடுத்த தேர்தலில் அதற்கான பாடத்தை கற்றுக்கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.