கிழக்கில் எழுக தமிழ் எழுச்சி
நாளை 10ஆம் திகதி கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நடைபெறவுள்ளது.
தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பல்வேறுபட்ட பிரச்சினைகளை வெளிப்படுத்தும் பொருட்டு இவ்எழுச்சிப் பேரணி தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கிறது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் உரிமைசார் விடயங்களை கையிலெடுத்து அதற்குத் தீர்வு காண வேண்டும் என்ற நினைப்பு ஆட்சியாளர்களிடம் அறவே இல்லாமல் போய்விட்டது.
தவிர, வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்த தமிழின அழிப்புத் தொடர்பில் எந்த விளக்கமும் விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை.
ஈழத்தமிழர்கள் என்றால் அவர்கள் கொல்லப்படலாம், கடத்தப்படலாம் ஏன்? காணாமல் போகவும் செய்யப்படலாம் என்ற நிலைமையே நம் நாட்டில் உள்ளது.
தமிழர்கள் என்பதால் இன்று விளக்கம், விசாரணை இன்றி சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் அவலங்கள் தீர்ந்த பாடில்லை. தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடத்தினால், தமிழ் அரசியல்வாதிகள் சிறைகளுக்குச் சென்று கைதிகளைச் சந்திப்பர். உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கோரிக்கை முன்வைப்பர்.
ஆட்சியாளர்களிடம் பேசி உங்களின் விடுதலையை வலியுறுத்துவோம் என்று உத்தரவாதமும் தருவர். இதனை நம்பி தமிழ் அரசியல் கைதிகள் தங்களின் உணவு தவிர்ப்புப் போராட்டத்தைக் கைவிடுவர்.
அவ்வளவுதான் அதனோடு சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் மறக்கப்பட்டு விடுவர். இதனால் கைதிகள் மட்டுமல்ல அவர் களின் குடும்பத்தினரும் சதா கவலையும் கண் ணீருமாக காலத்தை ஓட்டுகின்றனர்.
இதேபோன்று காணாமல்போனவர்களின் விடயமும் முடிவின்றித் தொடரும். இதற்கு மேலாக, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் எதிர்நோக்கு கின்ற விடயங்களும் இங்கு நோக்குதற்குரியவை.
கிழக்கு மாகாணத் தமிழ் மக்களின் நில அபகரிப்புக்கள், திட்டமிட்ட குடியேற்றங்கள், இராணுவ முகாம்களின் ஆதிக்கங்கள் எனப் பல்வேறு பிரச்சினைகள் கிழக்கில் உண்டு.
இந்நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வை வலியுறுத்தக் கோரியும் தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தியும் மட்டக்களப்பில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நடைபெறவுள்ளது.
இப்பேரணியின் வெற்றி என்பது மக்கள் எந்தளவுக்கு வீறுகொண்டு எழுகின்றனர் என்பதிலேயே தங்கியுள்ளது.
கிழக்கு மாகாணத்திலுள்ள ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் 10ஆம் திகதி நடைபெறும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் ஒன்றுதிரண்டு தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் போது நிச்சயம் தமிழர்களின் விடயம் கவனத்தில் எடுக்கப்படுவது தவிர்க்க முடியாத தாகிவிடும்.
இதைவிடுத்து ஏதோ நடக்கும் என்று நாம் நினைப்போமாக இருந்தால் எங்கள் இனத்தை மெல்ல மெல்ல வேரறுத்து இந்த நாட்டின் சிறுபான்மை இனம் என்ற வகுதியில் இருந்தும் தர இறக்கம் செய்து விடுவர்.
ஆகையால் எங்களுக்காக நாங்களே குரல் கொடுப்போம். எங்கள் பிரச்சினைகளை நாங்களே வெளிப்படுத்துவோம் எங்களுக்கு உரிமை வேண்டும் என்று எழுந்து நின்று கேட்போம்.
மக்களின் ஒன்றுபட்ட குரல் எழுக தமிழாக எழுச்சி பெறட்டும். அனைத்து பொது அமைப்புக்களும் இதற்கு உரம் கொடுக்கட்டும்.








