Breaking News

புலிகளின் விமான ஓடுபாதையை புனரமைக்கவே மக்களின் காணி அபகரிப்பு

விடுதலைப் புலிகள் உருவாக்கிய விமான ஓடுபாதையை புனரமைத்து அதற்கான பாதை ஒன்றை அமைப்பதற்காகவே, கேப்பாப்புலவு மக்களுடைய காணிகளை விமானப்படையினர் ஆக்கிரமித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.  


இதனாலேயே கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகளை வழங்க முடியாது என்று விமானப் படையினர் தன்னிடம் கூறியதாகவும் வடமாகாண முதலசைமச்சர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 84 ஆவது அமர்வு நேற்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, கேப்பாபிலவு, பிலவுக்குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த மக்களை அவர்களுடைய சொந்த நிலங்களில் மீள்குடியேற்றுமாறு கோரும் பிரேரணையை வடமாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் சபையில் முன்மொழிந்தார்.

இந்தப் பிரேரணை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பிலக்குடியிருப்பு மக்களையும், அவர்களுடைய காணிகளையும் பார்வையிட்டேன். இதன்போது, மக்களுடைய குடியிருப்புக்கு அப்பால் தமிழீழ விடுதலை புலிகள் பயன்படுத்திய விமான ஓடுபாதை ஒன்று காணப்பட்டதாகவும், அதனை புனரமைப்பு செய்து தாங்கள் பயன்படுத்துவதற்கு பாதை ஒன்றை அமைப்பதற்காகவே மக்களுடைய காணிகளை ஆக்கிரமித்துள்ளதாகவும், மக்களுடைய காணிகளை வழங்க முடியாது எனவும் விமானப் படையினர் கூறினர்.

இந்த நிலையில் மக்களுடைய குடியிருப்பை தவிர்த்து வேறுவழியாக பாதை அமைத்தால் என்னவெனக் கேட்டபோது, குடியிருப்பு தவிர்ந்த மற்றைய பகுதிகளை வனவள பாதுகாப்பு திணைக்களம் தங்களுடைய பகுதியாக அறிவித்திருப்பதாகவும் விமானப் படையினர் கூறினார்கள்.

எனவே, நியாயமான காரணம் இல்லாமலேயே விமானப் படையினர் கேப்பாபிலவு மற்றும் பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகளை அவர்களுடைய பயன்பாட்டில் வைத்திருக்கின்றார்கள் என்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.