Breaking News

மட்டுநகரில் எழுக தமிழ் பேரணி ஆரம்பம்

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் கிழக்கு எழுக தமிழ் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.


மட்டக்களப்பு கல்லடி மணிக்கூண்டு கோபுரம் தொடக்கம், சிவானந்தா தேசிய பாடசாலை வரையில் சிவப்பு மஞ்சல் கொடிகள் வீதியெங்கும் நடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதான அலங்கரிப்பு வேலைகளும் பூர்த்தியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு எழுக தமிழ் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாகவும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வர்கள் என எதிர்பார்ப்பதாகவும் தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழு உறுப்பினர் சட்டத்தரணி எஸ். விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன், இணைத்தலைவர் ரி. வசந்தராஜா உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எழுச்சியுரையாற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காலம் காலமாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில் இணைந்த வடகிழக்கே தமிழர்களின் தாயகம் என்பதையும் சமஸ்டியின் மூலமே தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வினை காணமுடியும் என்பதையும் தமிழ் மக்கள் சார்பில் வலியுறுத்தி கிழக்கு எழுக தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ளது.

தமிழ் மக்கள் அணி திரண்டு, தமது கோரிக்கைகளை உலகுக்கு உரத்துச் செல்லும் வகையில் ஒன்றுகூடுமாறும் தமிழ் மக்கள் பேரவையினால் அழைப்பு விடுத்துள்ளது.