தமிழ் மக்கள் என்றும் தோற்றுப் போனவர்கள் அல்லர்: சுரேஷ்
நாம் ஒவ்வொருவரும் மனது வைத்தால் இந்த நாட்டை புரட்டிப்போட்டு, எமது உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும். தமிழ் மக்கள் என்றும் தோற்றுப் போனவர்கள் அல்லர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கிழக்கு எழுக தமிழ் பேரணியில் கலந்துக் கொண்டு எழுச்சி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘தமிழ் மக்களுக்கு புதிய தலைமையொன்று தேவைப்படுகிறது. தமிழ் மக்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, இந்த மண்ணில் தமிழ் மக்கள் கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமாயின் அவர்களது உரிமைகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
ஆனால் மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் சென்றவர்கள் தமிழ் மக்களின் அந்த உரிமைகளை பெற்றுக் கொடுப்பதாக இல்லை. நாம் யார் மீதும் குற்றம் சுமத்த வேண்டும் என்று இதனை கூறவில்லை.
பல லட்சம் மக்களின் உயிர்களை தியாகம் செய்தும், உடைமைகளை இழந்தும் பல தசாப்தங்களாக நாம் எமது உரிமைகளுக்காக போராடினோம். ஆனால், இன்னும் எமது உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு போர்க்கொடி உயர்த்த வேண்டிய சூழ்நிலையிலேயே தொடர்ந்து வருகிறது.
நாம் ஒவ்வொருவரும் மனது வைத்தால் இந்த நாட்டை புரட்டிப்போட்டு, எமது உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும். தமிழ் மக்கள் என்றும் தோற்றுப் போனவர்கள் அல்லர். நாம் நிச்சியம் வெல்வோம்’ என்றார்.








