உரிமைகளுக்காக போராடும் மக்கள் போராட்டத்தினைக் கைவிடக்கூடாது: மனோ கணேசன்
தமிழர் தாயகப் பகுதியில் தமது உரிமைகளுக்காக போராடும் மக்கள் எக்காரணம் கொண்டும் போராட்டத்தினைக் கைவிடக்கூடாது என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கலந்துகொண்டு வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும், மண்மீட்பு போராட்டம், காணாமல் போனோரைக் கண்டறிவதற்கான போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவதற்கோ, ஊர்வலங்கள் செல்வதற்கோ மக்களுக்கு உரிமை இருக்கின்றது. அவ்வாறு அவர்கள் ஆணித்தரமாக போராட்டத்தினை நடத்தும் போதே, அரசாங்கத்திற்குள் இருந்து அவர்களுக்கு சார்பாக சில விடயங்களைச் செய்ய அது பயனுள்ளதாக அமையும்.
நீண்டகாலமாக தமது உரிமைகளுக்காக போராடிவரும் இம்மக்களுக்கு இப்போராட்டங்களின் மூலம் தீர்வுகள் கிடைக்கவேண்டும். அரசாங்கத்தினது கவனத்திற்கு இப்போராட்டங்கள் மூலம் மக்களது கருத்துக்கள் இலகுவில் சென்றடையும்” என அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.