‘உயிருடன் ஒப்படைத்த பிள்ளைகளை தாருங்கள்’ – தமிழர் தாயகத்தில் வலுக்கிறது போராட்டம்
படையினரிடம் உயிருடன் ஒப்படைத்த தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தமிழர் தாயக பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எவ்வித தீர்வும் இன்றி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்கின்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 47ஆவது நாளாக தொடர்வதோடு, வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் இன்று 59ஆவது நாளை எட்டியுள்ளது.
அத்தோடு, கிளிநொச்சியில் 63ஆவது நாளாகவும், யாழ்ப்பாணம் – மருதங்கேணியில் 40ஆவது நாளாகவும், திருகோணமலையில் 50ஆவது நாளாகவும் இப் போராட்டங்கள் தொடர்கின்றன.
இறுதி யுத்தத்தின் போது விசாரணைக்கென ஒப்படைக்கப்பட்ட தமது உறவினர்கள் 7 வருடங்கள் கடந்தும் விடுவிக்கப்படாத நிலையில், அவர்களது உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டுமென இம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அத்தோடு, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, அச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.