கண்ணீருக்கு பதில்கூறாத அதிகாரத் தரப்பிற்கு எதிராக ஹர்த்தால்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சபதம்
வீதியில் இறங்கி மாதக்கணக்கில் போராடி வரும் தாம் சிந்தும் கண்ணீருக்கு பதில் கூறாமல் பாராமுகமாக செயற்படும் அதிகாரத் தரப்பிற்கு எதிராக, வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் ஹர்த்தால் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த விபரங்களை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் எனத் தெரிவித்து, அவர்களது உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் முன்னெடுக்கப்பட்டுவரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (திங்கட்கிழமை) 64ஆவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது.
இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆ.லீலாதேவி மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
“எமது போராட்டத்தின் காரணத்தினை அனைத்து தரப்பினரிடமும் கண்ணீருடன் எடுத்துக்கூறியிருந்தும் இதுவரை எந்தத் தீர்வுமே கிடைக்காத நிலையில் எமது போராட்டத்தின் வடிவத்தினை மாற்றி, எதிர்வரும் 27ஆம் திகதி வடக்கு மாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தாலினை அனுஷ்டிக்க உள்ளோம்.
இதற்கு பாடசாலைகள், வர்த்தக நிறுவனங்கள், அரச திணைக்களங்கள் உள்ளிட்ட அனைத்து சமூகங்களும் ஒத்துழைப்புத் தருமாறு வேண்டி நிற்கின்றோம். அத்துடன் எதிர்வரும் மேதினத்தினை காணாமல் ஆக்கப்பட்டோரின் தினமாக அனுஷ்டிப்பதற்கும் நாம் தீர்மானித்துள்ளோம்” என லீலாதேவி மேலும் தெரிவித்தார்.








