Breaking News

இந்தியாவுடனான உடன்பாட்டுக்கு எதிர்ப்பு – தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்



திருகோணமலை எண்ணெய்க் களஞ்சியத் தொகுதி தொடர்பாக இந்தியாவுடன் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிறிலங்காவின் பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியரை் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளன.

நேற்று நள்ளிரவில் இருந்து நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடனான இந்த உடன்பாட்டை நிறுத்தக் கோரி இந்தப் போராட்டத்தில் ஈடுபட பெரும்பாலான தொழிற்சங்கங்கள் இணங்கியுள்ளன என்று பெற்றோலியக் கூட்டுத் தாபன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜனக ராஜகருண தெரிவித்துள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள இந்த உடன்பாடு இந்திய எண்ணெய் நிறுவனத்துக்குச் சாதகமானது என்றும், நாடு முழுவதும் அந்த நிறுவனம் விரிவுபடுத்திக் கொள்வதற்கே உதவும் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக நாளை மறுநாள் புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சு நடத்த திட்டமிட்டுள்ள நிலையிலேயே இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.