Breaking News

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தீவிரம்



வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்கால் கிழக்கு பகுதியில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தலைமையில் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கிழக்கு பிரதேசத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அவ்விடத்திற்கு சென்று அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடிய ரவிகரன் அம்மக்களின் பங்களிப்புடன் நினைவேந்தல் நிகழ்வை செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.

இதேவேளை, இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் மரணித்த 500 பொதுமக்களின் நினைவாக நினைவுக்கல் நடப்படவுள்ளது.

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் இவ் நினைவுக்கல்லினை அமைப்பதற்கான வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

யுத்தத்தில் மரணித்த பொதுமக்களின் நினைவாக குறித்த ஆலயத்தின் காணியில் நினைவுக்கல் அமைக்கப்படவுள்ளது. இதற்கமைவாக முதற்கட்டமாக 500 பொதுமக்களின் நினைவாக நினைவுக் கற்களில் பெயர் பொறிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.