Breaking News

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வடக்கு அமைச்சர்கள் விவகாரம் குறித்து ஆராய முடிவு



வடக்கு மாகாணசபை அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை, குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த புதன்கிழமை நடந்த கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து, கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்த விடயம் குறித்து தான் நாளிதழ்களின் மூலமே அறிந்திருப்பதாகவும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கும் கூட்டம் ஒன்றிலேயே இதுபற்றி ஆராய வேண்டும் என்றும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, வரும் 14ஆம் நாள் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் இடம்பெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதே நாளில் தான், வடக்கு மாகாணசபையின், சிறப்பு அமர்வில், இந்த விசாரணை அறிக்கை தொடர்பாக விவாதம் நடக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான, இலங்கை தமிழ் அரசுக் கட்சி இந்த விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் கூடி ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், இந்த விடயம் தொடர்பாக கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கட்சித் தலையினால் கோரப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.