Breaking News

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 7600 கர்ப்பிணி பெண்கள் பாதிப்பு!

நாட்டையே தடம்புரட்டியுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 7600 கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட காரியாலயம் தெரிவித்துள்ளது.


மேலும் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும் ஒரு இலட்சத்து 89 ஆயிரம் சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட காரியாலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கேற்ப ஐக்கிய நாடுகளின் குடும்ப கட்டுப்பாட்டு அமைப்பினால் சிறுவர்களுக்கான 10 ஆயிரம் உள்ளாடை அடங்கிய பொதியையும் கர்ப்பிணி பெண்களுக்கான 2000 உள்ளாடை அடங்கிய அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடகாரியாலயம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 208 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், 72 பேர் காயமடைந்துள்ளதோடு 92 பேர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.