Breaking News

சீனப் போராளி: இறந்தும் வாழும் காதல் கதை

சீனாவில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும்
என்று கோரிக்கை விடுத்து, பல ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளவர்தான் சீன அரசு அதிருப்தியாளர்களில் ஒருவரான லியு சியாவ்போ. லியு சியா என்பவரோடு நடைபெற்ற திருமணத்திற்கு பிறகு, பாதிக்கும் மேலான காலத்தை அவர் சிறையில் கழித்துள்ளார். 

இப்போது கல்லீரல் புற்றுநோயால் இறந்துள்ளார். 

லியு சியாவ்போ - லியு சியா ஜோடியின் காதல் எவ்வாறு நீடித்து நிலைத்தது என்று பிபிசியின் சிலியா ஹாட்டன், அவர்களின் வாழ்க்கை பயணத்தை திரும்பிப் பார்க்கிறார். திருமணம் செய்துகொள்ளவும் போராட்டம். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள அனுமதி பெறவே போராட வேண்டியிருந்தது. 

ஆனால், அரசை இடைவிடாமல் விமர்சித்துக் கொண்டிருக்கும் விமர்சகர்களில் ஒருவர், அவரது காதலியை திருமணம் செய்து கொள்ள சீன அரசு சம்மதித்தபோதும், இந்த ஜோடிக்கு பிரச்சனைகள் அப்படியே தொடர்ந்தன. 

இந்த ஜோடியின் அதிகாரப்பூர்வ திருமணத்தை படம் பிடிக்க வேண்டிய கேமரா கூட வேலை செய்யாமல் போய்விட்டது. அந்த புகைப்படக் கலைஞர் என்ன செய்வதென்று திகைத்தார். திருமணம் நடைபெற்ற இடத்திலுள்ள புகைப்படம் இல்லாவிட்டால், சீன திருமணச் சான்றிதழ் செல்லுபடியாகாது என்ற நிலை இருந்தது. 

எனவே, லியு சியாவ்போவும், அவரது எதிர்கால மனைவியுமான லியு சியாவும் அந்த திடீர் ஏற்பாட்டை செய்தனர். தங்களுடைய தனித்தனி புகைப்படங்களை எடுத்து, அருகருகே ஒட்டினர். இந்த தற்காலிக ஏற்பாட்டில் உருவான புகைப்படத்தில் முத்திரை குத்தப்பட்டு, இறுதியில் அவர்கள் திருமணம் செய்தனர். 

இது 1996 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டதே இந்த ஜோடிகளுக்கு கிடைத்த ஒரு சிறிய வெற்றிதான். அந்த சமயத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தன்னுடைய புதிய கணவரை, சீனாவின் வட கிழக்கு பகுதியிலுள்ள கடுமையான உழைப்பு முகாமுக்கு சென்று சந்திக்கும் உரிமையை இந்த திருமணம் மனைவி சியாவுக்கு வழங்கியது. ஒவ்வொரு மாதமும், சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கிலிருந்து 1,600 கிலோமீட்டர் (1000 மைல்) தொலைவில் இருந்த கடும் உழைப்பு முகாமிற்கும் சென்று வந்தார்.

"சித்ரவதை முகாமுக்கு ரயில்" என்ற அவர் எழுதிய ஒரு கவிதையில், "அழுகையால் கண்ணீர் வடிகிறது. அந்த கண்ணீர் எனது உடல் முழுவதும் வடிகிறது. ஆனாலும், உனது கைகளை என்னால் பற்றிகொள்ள முடியவில்லை" என்று சியா குறிப்பிடுகிறார்.