Breaking News

2050-ம் ஆண்டில் கண் பார்வையற்றோர் எண்ணிக்கை 11½ கோடியாக உயரும்

2050-ம் ஆண்டு சர்வதேச அளவில் கண் பார்வையற்றோரின் எண்ணிக்கை 11 கோடியே 50 லட்சம் ஆக அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 

சர்வதேச அளவில் தற்போது 3 கோடியே 60 லட்சம் கண் பார்வை யற்றோர் உள்ளனர். இந்த நிலையில் 2050-ம் ஆண்டில் அவர்களது எண்ணிக்கை 11 கோடியே 50 லட்சம் ஆக உயரும் அபாயம் உள்ளது. 

இங்கிலாந்தில் உள்ள ஏஞ்சிலியா ருக்சின் பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் சர்வதேச அளவில் 1.88 நாடுகளில் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 

1980 முதல் 2015-ம் ஆண்டு வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 2050-ம் ஆண்டில் 11 கோடியே 50 லட்சம் பேர் கண் பார்வையற்றோராக இருப்பது தெரிய வந்தது. 

அவர்களில் பெரும்பாலும் வளர்ந்து வரும் ஆசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவில் சகாரா பாலைவனத்தை ஒட்டியுள்ள நாடுகளில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அது வரும் ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து 2050-ம் ஆண்டில் 11 கோடியே 50 லட்சமாக உயரும். அதாவது தற்போதைய அளவைவிட 3 மடங்கு அதிகரிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 

இதற்கு வயது முதிர்ச்சியே காரணம் என கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் கண் பார்வை யற்றோரின் எண்ணிக்கையும் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. 

சிகிச்சையின் மூலம் இவர்களின் கண் பார்வையற்ற நிலையை சரி செய்ய முடியாது என்றும், கண் பார்வை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 58 கோடியே 80 லட்சமாக உயரும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.