ஜனாதிபதியிடம் ஹுசேன் வலியுறுத்து நியூயோர்க்கிலிருந்து ரொபட் அன்டனி
காணாமல் போனோர் குறித்த அலுவலகத்தை விரைவில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உறுப்பினர்க ள் அந்த அலுவலகத்துக்கு நியமிக்கப்படவேண்டும் என்று நேற்று நியூயோ ர்க்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் வலியுறுத்தினார். இதுவரை அரசாங்கம் முன்னெடுத்துள்ள செய்பாடுகள் தொடர்பில் பாராட்டு தெரிவிப்பதாகவும் எனினும் நல்லிணக்க செயற்பாடுகளை கைவிடாமல் தொடர்ச்சியாக முன்னெடுக்கவேண்டும் என்று ம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் செய்ட் அல் ஹுசேன் குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கையானது ஜெனிவாவில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய செயற்பட்டுவருவதாகவும் வழங்கப்பட்டுள்ள இரண்டுவருட கால அவகாசத்தில் முன்னேற்றத்தை காட்ட முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்ட் அல் ஹுசேனிடம் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் அவ்வாறு முன்னெடுக்கப்படும் முன்னேற்றங்களை நேரில் பார்வையிடுவதற்காக 2018 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருமாறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனை நேற்று நியுயோர்க்கில் சந்தித்து கலந்துரையாடியபோதே இந்த விடயங்கள் பரிமாறப்பட்டன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்கியிருந்த லோவ்ஸ் ரிஜன்ஸி ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து அல் ஹுசேனுக்கு விளக்கமளித்துள்ளார்.
அத்துடன் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதில் காணப்படுகின்ற தடைகள் குறித்தும் ஜனாதிபதி அல் ஹுசேனிடம் எடுத்துரைத்துள்ளார். சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனை மூன்றாவது தடவையாகவும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
இலங்கையானது ஐக்கிய நாடுகள் சபையின் 62 வருடகால நண்பன். ஐக்கிய நாடுகளின் சாசனங்கள் மற்றும் பட்டயங்களுக்கு அமைவாக இலங்கை செயற்பட்டுவருகின்றது.
நாம் சர்வதேசத்துடனான தொடர்புகளை முன்னேற்றி நட்புறவை வளர்ப்பதன் மூலம் மக்களுக்கு நன்மைகளை பெற்றுக்கொடுப்போம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக இலங்கை அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது.
அதன் கீழ் பல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் அலுவலகத்தை அமைப்பற்கான வர்த்தமானியில் நான் அண்மையில் கைச்சாத்திட்டேன்.
மேலும் காணாமல் போனோரின் உறவினர்கள் சிலர் என்னை அண்மையில் சந்தித்து பேச்சு நடத்தினர். அதன்போது தமது காணாமல் போன உறவினர்களை சில இடங்களில் கண்டதாக கூறினர்.
உடனடியாக பொலிஸ் பாதுகாப்பும் வாகனம் தருவதாக கூறி அவர்களை கண்டுபிடிக்குமாறு அந்த உறவினர்களுக்கு நான் கூறினேன்.
அத்துடன் புதிய அரசியலமைப்பை அமைப்பதற்கான முதலாவது இடைக்கால அறிக்கை அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.
காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகள் கிரமம் கிரமமாக நடைபெற்றுவருகின்றன. அரசாங்கம் அந்த செயற்பாட்டை வெற்றிகரமாக படிப்படியாக முன்னெடுத்துவருகின்றது. இந்த விடயத்தில் அடிப்படைவாதிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சுய இலாபம் அடைய முயற்சிக்கின்றனர்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளை குறைதது மதிப்பிடுகின்றனர்.
சிறையில் உள்ள சந்தேக நபர்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய பட்டியல் வெ ளியிடப்பட்டுள்ளது.
இந்த விடயங்களை ஜெனிவாவில் பிரேரணை நிறைவேற்றப்பட்டடதற்காக நாங்கள் செய்யவில்லை. மாறாக மக்களின் தேவைகளை இனம் கண்டு செய்கின்றோம்.
குறிப்பாக உலக நிலைமை மற்றும் உள்நாட்டு அரசியல் காரணிகளை அடிப்படையாகக்கொண்டே இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம். தேவையற்ற அவசரத்தை காட்டினால் சிக்கலாகிவிடும். மிகவும் அவதானத்துடன் பயணிக்கவேண்டியுள்ளது.
சிலர் நாங்கள் எவ்விதமான முன்னேற்றத்தையும் வெ ளிக்காட்டவில்லை என்று கூறுகின்றனர். அவ்வாறு கூறுவதன் மூலம் இந்த செயற்பாடுகளை அழிக்கவே முயற்சிக்கின்றனர்.
இலங்கையானது ஜெனிவாவில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது, எமக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டுவருட கால அவகாசத்தில் முன்னேற்றத்தை காட்ட முடியும் .
அவ்வாறு முன்னெடுக்கப்படும் முன்னேற்றங்களை நேரில் பார்வையிடுவதற்காக 2018 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருமாறும் உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.
தொடர்ந்து இந்த சந்திப்பின்போது ஐககிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் குறிப்பிடுகையில் என்னை சந்திக்க இணக்கம் தெரிவித்தமைக்காக நன்றி தெரிவிக்கின்றேன்.
நீங்கள் இதுவரை மேற்கொண்டுள்ள முன்னேற்றங்களை பாராட்டுகின்றேன். ஆனால் இந்த முன்னேற்றத்தில் தொடர்ச்சி என்பது மிகவும் முக்கியமாகின்றது. அந்த தொடர்ச்சியை நீங்கள் இடைவிடாது பேணவேண்டும்.
அத்துடன் காணாமல் போனோர் குறித்த அலுவலகத்தை விரைவில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோன்று சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உறுப்பினர்கள் அந்த அலுவலகத்துக்கு நியமிக்கப்படவேண்டும் என்று கோருகின்றேன்.
உங்களின் இந்த அனைத்து முயற்சிகளுக்கும் உதவி செய்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தயாராக இருக்கின்றது. இவ்வாறானதொரு பிரச்சினையில் நல்லிணக்கத்தை ஒரே இரவில் மேற்கொள்ள முடியாது என்பதனை ஏற்றுக்கொள்கின்றேன்.
ஆனால் இங்கு முன்னேற்றங்களின் தொடர்ச்சி என்பதே மிகவும் முக்கியத்துவமிக்கதாக உள்ளது என்றார்.
இதேவேளை இந்த சந்திப்பு தொடர்பில் நேற்று நியுயோர்க்கில் நடைபெற்ற இரவு விருந்துபசாரததின்போது கருத்து வெ ளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுகையில்
நல்லிணக்கத்தை முன்னெடுப்பதில் காணப்படுகின்ற தடைகள் குறித்து விளக்கமளித்தேன்.
மேலும் எமக்கு இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு வருடங்களில் முன்னேற்றத்தைக் காட்டுவதாக நான் கூறினேன்.
ஹுசேன் உலகின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து என்னிடம் கலந்துரையாடினார்.
மியன்மார் பிரச்சினை தொடர்பாகவும் என்னிடம் பேசினார் என்றார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட வெளியுறவு அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் குறிப்பிடுகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரிடம் ஜனாதிபதி பல்வேறு விடயங்களை எடுத்துக்கூறினார்.
நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அல் ஹுசேனிடம் எடுத்துரைத்தார்.
மேலும் படிப்படியாகவே முன்னேறிச் செல்வோம் என்பதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு ஜனாதிபதி விளக்கினார்.
அதனை செய்ட் அல் ஹுசேன் ஏற்றுக்கொண்டார்.
நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான எமது முன்னேற்ற பயணம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இணக்கப்பாட்டை தெரிவித்தார்.
நல்லிணக்கம் தொடர்பான எமது எதிர்கால பயணத்துக்கு காணப்படுகின்ற தடைகள் குறித்து ஜனாதிபதி விளக்கமளித்தார். அவருக்கு அந்த தெளிவை வழங்கவேண்டியது அவசியம். அதனை ஜனாதிபதி செய்தார்.
எமக்கு உள்நாட்டு ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தடைகள் உள்ளன என்பதனை ஜனாதிபதி எடுத்து கூறினார். சர்வதேசத்தின் சில போக்குகளும் எமக்கு தடையாக உள்ளன என்றார்.