Breaking News

ஈராக்கில் நடந்த குர்திஸ்தான் பொதுவாக்கெடுப்பை அங்கீகரிக்கவில்லை - அமெரிக்கா தகவல்

ஈராக்கின் வடபகுதியில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் குர்திஸ்தான் பகுதி ஈராக் ஆட்சியின் கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுகிறது. ஈராக்கின் எண்ணெய் வளம் மிக்க இந்த பகுதியை குர்திஸ்தான் என்ற சுதந்திர நாடாக அறிவிக்கும்படி குர்து மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

குர்திஸ்தான் பிராந்தியத்தில் சுதந்திர நாடு கோரி கடந்த திங்கட்கிழமை பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 92 சதவீத மக்கள் தனி நாட்டிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என அந்த வாக்கெடுப்பை நடத்திய குர்திஷ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், ஈராக்கில் கடந்த திங்கள் கிழமை நடத்தப்பட்ட குர்திஸ்தான் பொதுவாக்கெடுப்பை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.

மேலும், "வாக்கெடுப்பும், முடிவும் சட்டபூர்வமானவை அல்ல. ஒரு ஐக்கிய, கூட்டாட்சி, ஜனநாயக மற்றும் வளமான ஈராக்கை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம். அங்கு அமைதியை நிலைநாட்டவும், குரல் குற்றச்சாட்டுகள் மற்றும் பரஸ்பர நடவடிக்கைகள் மீதான அச்சுறுத்தல்களை முடித்து வைக்கவும் நாங்கள் வலியுறுத்துகிறோம்", என அவர் கூறியுள்ளார்.

குர்திஸ்தான் பொதுவாக்கெடுப்பிற்கு ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதியும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.