பொதுவாக்கெடுப்பே தமிழருக்குரிய ஆயுதம் - வைகோ
ஜெனீவாவில் இருந்து வைகோ சமஷ்டி,
அதிகாரப் பகிர்வு ஓர் ஏமாற்று வித்தை!

அங்கு உண்மையான உணர்வுள்ள தலைவர்கள் இருக்கிறார்கள். ஏனையவர்களும் இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் தமது உயிர்களை விடுதலைக்காக தியாகம் செய்திருக்கிறார்கள்.
அந்தப்பூமியில் இன்று 90 ஆயிரத்துக்குமேற்பட்ட குழந்தைகள் அநாதரவாக்கப்பட்டுள்ளார்கள். மது, விபசாரம், பாலியல், போதைவஸ்து என திட்டமிட்டமுறையில் கலாசார சீரழிவுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில், இலங்கையிலுள்ள தமிழர்களை ஆயுதமேந்திப் போராடவேண்டுமென நான் கூறவிரும்பவில்லை.
சமஷ்டி பெறுவது சாத்தியமற்றது என்பதை தந்தை செல்வா உணர்ந்துகொண்டதனால்தான் வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை செய்தார். அமைதியாகப்போராடி தோற்றுப்போனவர்கள் தமிழர்கள்.
தற்பொழுது பௌத்த நாடு என்ற கோதாவில் தமிழர்களை நிரந்தர அடிமைகளாக்க இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த உண்மையை உலகம் தெரிந்துகொள்ளவேண்டும்.
சுவிட்ஸர்லாந்து நாட்டில்தான் முதன்முதல் அரசியல் சாசனத்தில் சர்வஜன வாக்கெடுப்பென்ற முறை கொண்டுவரப்பட்டது. நாடொன்றில் வாழும் குறிப்பிட்ட தொகை மக்கள் பிரிய விரும்பினால் சட்டமொன்றைக்கொண்டு வந்து பொதுவாக்கெடுப்புக்கு விடவேண்டுமென்ற சட்டத்தை கொண்டுவந்தார்கள்.
அதன்படி பொதுவாக்கெடுப்பென்பது சுய நிர்ணய அடிப்படையில் பார்ப்பின் சுயநிர்ணய உரிமையென்பது மனித உரிமைத்தொடரின் ஒரு வாக்கியமாகும். அதேபோல் ஜெனீவா மனித உரிமைப் பிரகடனத்தில் சுயநிர்ணய உரிமையைக்கோருவதற்கு சகல மக்களுக்கும் உரிமையுண்டென அந்த சட்டவிதிகள் திட்டவட்டமாக கூறுகின்றன.
ஆகவே சுயநிர்ணய உரிமையைப்பெறுவதற்கான வழியென்ன? ஆயுதப்போராட்டத்தின் வாயிலாக சுயநிர்ணய உரிமையை பலதேசிய இனங்கள் உலகத்தில் பெற்றிருக்கின்றன.
அவ்வாறு போராடிய அமைப்புக்களுக்கு பலநாடுகள் உதவி புரிந்துள்ளன.
அந்த இனத்தைச்சேர்ந்த மக்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி போராட உதவினார்கள்.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் ஐயாயிரம் ஆண்டுகளாக பிரச்சினை இருந்துகொண்டிருக்கிறது.
இஸ்ரேல் தனிநாடாவதற்கு அமெரிக்காவிலுள்ள யூதர்கள் கோடி கோடியாக அள்ளிக்கொடுத்த ஆயுதங்களை, ஹோல்டா மேயர் கொண்டுபோய் பென்குயின் என்ற இடத்திலே சேர்த்து ஆயுதப்போராட்டத்தின் மூலம் நாட்டை நிர்மாணித்தார்கள்.
பிரித்தானியா அதற்கு முழுமையாக உதவி புரிந்தது. ஆயுதப்போராட்டத்தை நடத்தமுடியாத சூழலில் பொதுவாக்கெடுப்பு நடத்தி தங்களுடைய நாட்டின் சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு உலகத்தலைர்கள் வந்தார்கள்.
ரஷ்யாவின் ஒக்டோபர் புரட்சியின் தலைவர் லெனின் தான் தேசிய இனமொன்றுக்கு சுயநிர்ணய உரிமையுண்டென்பதை முதல்முதலாக பிரகடனம்செய்தவர்.
பின்னர் இரண்டாம் உலகமகா யுத்தகாலத்தில் 1941 இல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரூஸ்வெல்ட் பிரித்தானியப் பிரதமர் வின்சன்ட்சேர்ச்சிலும் அத்திலாந்திக்கடலில் ஒரு கப்பலில் குறித்தவொரு ஒப்பந்தத்தை செய்தனர்.
அந்த ஒப்பந்தம் அத்திலாந்திக் ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் சுய நிர்ணய உரிமையை பிரகடனம் செய்தார்கள்.
இத்தகைய பிரகடனங்களின்பின் சுயநிர்ணய உரிமைக்கான பொதுவாக்கெடுப்பானது 1905 ஆம் ஆண்டு ஸ்கன்டிநேவியன் நாடுகளுக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அமைதியான முறையில் நோர்வே ,சுவீடன் ஆகிய நாடுகள் தனி நாடுகளாக பிரிந்து கொண்டன.
1944 ஆம் ஆண்டு ஐஸ்லாந்து பொதுவாக்கெடுப்பின் மூலம் தனிநாடாகப் பிரிந்தது. இதுபோலவே 1958 ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பின் மூலம் கயானா பிரிந்து கொண்டது.
1990 இல் சுவேனியா ,குரேசியா பொதுவாக்கெடுப்பின் காரணமாக தனிநாடுகள் ஆயின. 1991 ஆம் ஆண்டு குரேசியா பொதுவாக்கெடுப்பில் தனிநாடாயிற்று.
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் ஜோர்ஜியாவிலிருந்து பராத்தீவுகள் மொத்தம் 11450 சனத்தொகை கொண்ட இந்த நாட்டில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு .5 வீதத்தால் வெற்றிபெற்று தனிநாடாகிவிட்டார்கள்.
1991 செப்டெம்பரில் மசிடோனியா 1991 டிசம்பரில் உக்ரேயின் 1991 டிசம்பரில் ரானவித்திரியா மல்கோவா 1992 பொஸ்னியா ஆகிய நாடுகள் பொது வாக்கெடுப்பின் மூலம் தனிநாடுகளாயின.
6 இலட்சம் மக்களை மாத்திரம் சனத்தொகையாகக்கொண்ட எரித்திரியா 1993 ஆம் ஆண்டு தனிநாடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதே போன்றே மல்டோவா 1994 மார்ச்சிலும் கிழக்கு தீமொர் 1999இல் இந்தோனேசியாவிலிருந்து பொது வாக்கெடுப்பில் பிரிந்தது.
கிழக்கு தீமோர் பிரிவதற்கான பொது வாக்கெடுப்பை ஐக்கிய நாடுகள் சபையே தனது நேரடிக் கண்காணிப்பில் நடத்தியது.
இதன்பிறகு 2011இல் தென்சூடான் பொதுவாக்கெடுப்பின் மூலம் பிரிந்து கொண்டது.
நாளைய தினம் குர்தீஸ் நாட்டுக்கான பொதுவாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அநேகமாக பொதுவாக்கெடுப்பில் அவர்கள் வெற்றிபெறுவார்கள். பிரிததானியப் பேரரசின் கீழ்தான் இங்கிலாந்து அடிமைப்பட்டுக்கிடந்தது.
பிரித்தானிய சாம்ராஜ்ஜியம் இலங்கையை விட்டு வெளியேறியபோது தமிழ் மக்களை சிங்கள மக்களின் அடிமைகளாக்கிவிட்டு வெளியேறிவிட்டார்கள்.
நியூசலிடேனியா மற்றும் போல்போகன்வில்லே ஆகிய நாடுகளில் சுதந்திர நாட்டுக்கான பொதுவாக்கெடுப்பு 2019 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கிறது. இந்த நாடுகள் 8 இலட்சத்துக்கும் 10 இலட்சத்துக்கும் இடைப்பட்ட சனத்தொகை கொண்ட சிறிய நாடுகள்.
அவ்வாறு இருக்கும் போது ஆயிரக்கணக்கான வருடங்கள் ,ஈழத்தமிழர்கள் தனியரசு வைத்து தனித்தேசமாக, தனித்தேசிய இனமாக வாழ்ந்தவர்கள். மொத்த இலங்கையும் தமிழர்களின் பூர்வீக நிலங்களாக இருந்தவை. ஏனைய சமூகத்தவர்கள் வந்து குடியேறியவர்கள்.
இதுவொரு புறமிருக்க, இலங்.கையை ஆட்சி செய்த போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிரித்தானியர் இரண்டு தேசிய இனங்களை ஒன்றாக்கி வைத்தார்களே தவிர, கலாசாரம், நாகரிகம், பண்பாடு ஆகியவற்றில் இரு இனமும் ஒன்றாகவிருக்கமுடியாது என்று கருதவில்லை.
எனவே, நம்பக்கமுள்ள நியாயத்தை உலக நாடுகளுக்கு கொண்டுசெல்கிறபோது மேலே குறிப்பிட்ட நாடுகள் பொது வாக்கெடுப்பின் மூலம் தனிநாடுகளாகியிருக்கும்போது இனவழிப்புக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் தமிழீழம் ஏன் தனிநாடாக முடியாது.
மனிதவுரிமைப்பிரகடனம் நிறைவேற்றப்பட்டதற்கு முதல்நாள் 1948 டிசம்பர் 9 ஆம் திகதி இனப்படுகொலை சம்பந்தமான பிரகடனம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இனப்படுகொலையென்றால் என்ன என விளக்கப்பட்டிருக்கிறது.
அதற்கான தண்டனை என்னவென்பதுபற்றி கூறப்பட்டிருக்கிறது. இந்த இலக்கணங்களுக்கு உட்பட்டதுதான் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகளாகும்.
எனவேதான், இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றமை நிரூபிக்கப்பட்டிருக்கும் சூழலில் உலகம் கடமை தவறியது.சர்வதேச நாடுகள் கடமை தவறியுள்ளன. ஐ.ந. சபை கடமை தவறியிருக்கிறது.
இந்தவிவகாரத்தை உறுப்பு நாடுகள் பாதுகாப்பு சபையினூடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு சென்றிருந்தால் எப்படி பொஸ்னியா தலைவருக்கு நடந்ததோ அதைவிடஅதிகமான தண்டனைக்கு முன்னாள் ஜனாதிபதி ராஜபக் ஷவின் கூட்டத்தினர் பெற்றிருப்பார்கள்.
எனவே, நம்பக்கம் நியாயம் இருப்பது மட்டுமல்ல நாம் இரத்தம் சிந்திப்போராடியது மட்டுமல்ல எதிர்காலத்தில் நம்மினத்தின் கலாசார சுவடுகள் இல்லாமல் அழிந்து நிரந்தர அடிமைகள் ஆக்கிவிடுவார்கள் என்பதை உணர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.
மேலும் உலகத்தின் பூர்வீகம் ஒன்று அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது . அது தடுக்கப்படவேண்டும் என்பதையுணர்ந்து ஒரேகுரலில் போராட வேண்டும். இனி ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியமில்லை.
பொதுவாக்கெடுப்பே ஆயுதமாகும். இந்த ஆயுதத்தை உலகத்தமிழர்கள் பயன்படுத்தவேண்டும். எனக்கு ஒரேயொரு மகிழ்ச்சி 53 ஆண்டுகள் அரசியல் செய்து வருகிறேன். 5 ஆண்டுகள் சிறையிலிருந்துள்ளேன்.
ஈழத்தமிழர்களுக்காக இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தேன். வாழ்க்கையில் நான் ஏதாவது சாதித்துள்ளேன் என்றால் 2011 ஆம் ஆண்டு ஆனிமாதம் ஐரோப்பிய ஒன்றிய கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டில் குறிப்பிட்டிருந்தேன் 'தமிழ் மக்கள் உரிமையைப்பெறுவதற்கான ஒரேயொரு வழி பொது வாக்கெடுப்புத்தான்' என்று பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.
அதற்கு முன் சிங்கள குடியேற்றங்கள் அகற்றப்படவேண்டும்.
சிறையிலுள்ள விடுதலைப்புலிகள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும். -
ஐக்கிய நாடுகள் மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.
அதுமட்டுமன்றி, புவியில் எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழுகிறார்களோ அங்கெல்லாம் வாக்குப்பெட்டி வைத்து பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனக் கூறியிருந்தேன்.
98 சதவீத வாக்குகள் கிடைக்கப்பெற்று பொது வாக்கெடுப்பில் வெற்றிபெறும் சந்தர்ப்பம் உருவாகும்.
இச்செய்தியை ஈழத்தமிழர்களுக்கு மட்டுமன்றி, தொப்புள்கொடியுறவுகளான தமிழக மக்களுக்கும் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
இந்த உலகத்தின் பூர்வீக இனம் அழிக்கப்படுகிறது. .ஈழத்தமிழர்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுக்கவேண்டிய தேவை உலகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.
எந்தவித உதவியுமின்றி 7 அணுவாயுத நாடுகளுடன் போரிட்டுக்கொண்டவன் தலைவன் பிரபாகரன். அவனுக்கு இணையாக பிடல்காஸ்ரோவையோ சேகு வேராவையோ ஒப்பிட முடியாது.
தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்ந்த மகத்தான தலைவர் பிரபாகரன். அவர் ஈந்த இரத்தமும் தியாகமும் வீண்போகாது.
நான் அறுதியிட்டு கூறுவேன். பொது வாக்கெடுப்பொன்றின் மூலம் ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
இக்கருத்தை ஈழத்தலைவர்கள் கூறியது கிடையாது.தமிழ் நாட்டு தலைவ ர்கள் முன்வைத்ததில்லை. வைகோ அறிவாளியாக இல்லாவிட்டாலும், இறந்துபோன மாவீரர்களின் ஆவி கூறிய நிலையில் பொதுவாக்கெடுப்பொ ன்றே தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வென்று கூறினேன்.
அதைத்தான் இப்பொழுதும் கூறுகிறேன்.
பொதுவாக்கெடுப்பு நடக்கும் நடக்க வைப்போம்.