Breaking News

தமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகளே ஏமாற்றுகின்றனர் – சுரேஸ் குற்றச்சாட்டு



புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக தமிழ் மக்களை ஏமாற்றுவது சிங்கள அரசியல்வாதிகள் அல்ல, தமிழ் அரசியல்வாதிகளே என ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பாக வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும், இடைக்கால அறிக்கையைத் தயாரித்தவர்களில் முக்கியமானவருமான ஜயம்பதி விக்கிரமரட்ண இடைக்கால அறிக்கை தொடர்பாக ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துத் தொடர்பாகக் கூறுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஜயம்பதி விக்கிரமரட்ணவின் ஊடகவியலாளார் சந்திப்பில், இடைக்கால அறிக்கையின்படி மாகாணமொன்று பிரிவினைவாதச் செயற்பாட்டில் ஈடுபடுமெனில் அல்லது மாகாணமொன்றில் அசாதாரண சூழ்நிலை ஏற்படுமெனில் அந்த மாகாணசபையைக் கலைப்பதற்கோ அல்லது அந்த மாகாணசபையை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு அரச தலைவருக்கு அதிகாரம் உண்டு எனவும் புதிய அரசியலமைப்பானது ஒற்றையாட்சியை மேலும் வலுப்படுத்துவதாக அமையும் என்றும் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில், இந்த இடைக்கால அறிக்கையை கொண்டு வருவதில் ஜயம்பதி விக்கிரமரட்ணவுக்கு பாரிய பங்களிப்பொன்று இருந்த அதேநேரம், புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியை மேலும் வலுப்படுத்தும் என்பது மட்டுமல்லாது, மாகாணங்கள் தொடர்பில் கிடுக்கிப் பிடிகளை போட்டு அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்படும் என்ற விடயங்களை அவர் இதன்போது மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியிருப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.

இதில் ஒற்றையாட்சி கிடையாது என்று சம்பந்தன் சொல்கிறார். “ஏக்கிய ராஜ்ஜிய’ என்பதற்கு “ஒருமித்த நாடு’ என்று தற்போது அர்த்தப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிங்களத்திலும் ஏக்கிய ராஜ்ஜிய என்பதற்கு ஒருமித்த நாடு என்று வியாக்கியானம் சொல்லப்பட்டிருந்ததாகவும் சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் சொல்கின்றனர். அதை நம்புமாறும் அவர்கள் தமிழ் மக்களை கேட்கின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. பிரேமசந்திரன் தெரிவித்தார்.

எனினும், புதிய அரசியலமைப்பானது அறுதியும் இறுதியுமாக ஒற்றையாட்சியைக் கொண்டிருக்கும் என்று வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கையை வரைந்த நிபுணர்களில் ஒருவரான ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இங்கு தமிழ் மக்களை சிங்கள பிரதிநிதிகள் ஏமாற்றவில்லை. தமிழ் மக்களை தமிழ் பிரதிநிதிகள் ஏமாற்றுகின்ற சூழலொன்றை தான் நாம் இங்கு பார்க்கக்கூடியதாக இருக்கின்றது என்று சுரேஷ் பிரேமச்சந்தின் இதன்போது குறிப்பிட்டார்.