காணி, பொலிஸ் அதிகாரங்களை நாங்கள் விட்டுக்கொடுக்கமாட்டோம் – சம்பந்தன்
புதிய அரசியலமைப்பில் மக்களின் அடிப்படை உரிமைகளான காணி, பொலிஸ் அதிகாரங்களில் எந்த விட்டுக்கொடுப்புக்குமிடமில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மன்னார் ஆயரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் மக்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக உருவாக்கப்படும் இந்த அரசியல் யாப்பினை நாங்கள் உதாசீனம் செய்யக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் மன்னார் ஆயர் இல்லத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம் பிள்ளை ஆண்டகையை சந்தித்து ஆசீ பெற்றுக்கொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், ஆயருடனான சந்திப்பின்போது, தற்கால அரசியல் நிலமை தொடர்பாக ஆயருடன் கலந்துரையாடினார்.
அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் மன்னார்மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையினையும் சந்தித்து புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.








