Breaking News

ஒற்றையாட்சியில் மாற்றம் இருக்கக் கூடாது - ஜாதிக ஹெல உறுமய



சிறிலங்காவின் ஒற்றையாட்சி தன்மையில் எந்த மாற்றமும் செய்யப்படக் கூடாது என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலரான அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க, இதுதொடர்பாக கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையில்,

“அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் சிறிலங்கா அரசின் தன்மை தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதற்கு ஹெல உறுமய எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

மாகாணசபை முறைமை நாட்டின் ஒற்றையாட்சி தன்மையில் சில பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சித் தன்மை மற்றும் தற்போதைய அரசியலமைப்பின் 4 (1) மற்றும் 76 (1) ஆவது பிரிவுகள் அப்படியே தொடர வேண்டும்.

இடைக்கால அறிக்கையில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

ஆனால், தற்போதைய அரசியலமைப்பில், எந்தவொரு குறிப்பிட்ட மதத்துக்கும் சிறப்பு நிலை அளிக்கப்பட்டிருக்கவில்லை.

புதிய அரசியலமைப்பு நாட்டின் உறுதிப்பாட்டையும், ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.